ஹலால் உணவுத் துறையில் அதிகமான இந்தியர்கள் ஈடுபட வேண்டும் - மைக்கி

27/11/2020 08:47 PM

கோலாலம்பூர், 27 நவம்பர் (பெர்னாமா) -- ஹலால் உணவு பொருட்கள் உலக சந்தை வாய்ப்பை கொண்டுள்ளதால், இத்துறையில் அதிகமான இந்தியர்கள் ஈடுபட வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், ஹலால் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயலாற்ற மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனமான மைக்கி முணைப்பு காட்டும் என அதன் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் பங்கு பெரும் மலேசிய இந்திய வணிகர்களுக்கு ஒரு வருடத்திற்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு பின்பு ஹலால் சான்றிதழும் வழங்கப்படும்.

அரசாங்கத்தால் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவ உள்ளதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

''உணவுத் துறையில் ஈடுப்பட்டுள்ள மலேசிய தொழில் முனைவர்கள் ஹாலால் சான்றிதழ் பெறுவதற்காக ஒரு பயிற்சி பட்டறை பன்னிரண்டு மாதத்திற்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. இச்சான்றிதழை கொண்டிருப்பதால் நாடளவிலும் உலகளவிலும் அவர்களின் பொருட்களை விற்க இயலும்'' என்றார் அவர்.

இச்சான்றிதழ் வழி இந்திய வணிகர்கள் உலக சந்தையில் ஹாலால் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பதால் வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், அதிகமான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் ஆதரவு வழங்குவார்கள் என்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

''இந்த பட்டறையானது ஒட்டுமொத்தமாக மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. சான்றிதழைப் பெற்றவுடன் அதனை மற்ற நாடுகளில் விற்பதற்கான முறைகளும் செயல்பாடுகளும் கற்றுகொடுக்கப்படும்'' என்றார் அவர்.

உணவு தொழில், அழகு சாதன பொருட்கள் தொழில், சுற்றுலா துறை போன்றவற்றிற்கு இச்சான்றிதழ் வழங்குவதற்கு மைக்கி தயாராக உள்ளது.

இச்சான்றிதழை பெருவதன் வழி அனைத்து துறையில் ஈடுபட்டிருக்கும் இந்திய தொழில் முனைவர்களுக்கு வெளிநாடுகளிலும் வணிகம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் கிட்டும் என்றும் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

''இந்தியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. உணவு மற்றும் மற்ற துறையைச் சார்ந்தவர்கள் ஹாலால் சான்றிதழ் தேவைப்பட்டால் நிச்சயமாக மைக்கியை அணுகலாம்'' என்றார் அவர்.

--பெர்னாமா