பொது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 'ஆளவந்தான் குழு' நடவடிக்கை முறியடிப்பு

26/11/2020 10:33 PM

அலோர் ஸ்டார், 26 நவம்பர் (பெர்னாமா) -- சுங்கை கராஙான், புக்கிட் சோங்கில் மூன்று லட்சம் ரிங்கிட் மதிப்புடைய செம்புக் கட்டிகளை ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்றை பறிமுதல் செய்ததாக நம்பப்படும் ஆளவந்தான் கும்பலின் நடவடிக்கையை போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பிற்பகல் 1.24 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், 35 மற்றும் 44 வயதுடைய சம்பந்தப்பட்ட வாகனமோட்டி மற்றும் உதவியாளர் புக்கிட் செலாம்பாவிலிருந்து சுங்கை கராஙானிலிருந்து சென்றுக் கொண்டிருந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஸ்ஹார் ஹஷிம் தெரிவித்தார்.

''சம்பவ இடத்தை வந்தடைந்ததும் புக்கிட் சோங் பகுதியில் அவர்களின் கனரக வாகனத்தை ஒரு வெள்ளை நிற வேன் வழிமறித்ததோடு. அதில் நால்வர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து சுங்கத்துறை அமலாக்க அதிகாரிகள் போல் வேடமிட்டு, கனரக வாகனத்தின் வாகனமோட்டியையும் உதவியாளரையும் வேனில் ஏறுமாறு கூறியிருக்கின்றனர். அந்த கனரக வாகனம் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது,'' என்று அவர் தெரிவித்தார்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இவ்விரு பாதிக்கப்பட்டவர்களும் சாலையோரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் மீண்டும், கனரக வாகனம் இருந்த இடத்திற்கு திரும்பும்போது, அது அங்கு காணாமல் போயிருந்ததால், அதே நாளில் சுங்கை கராஙான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

வாகனமோட்டி, அதன் உதவியாளர் மற்றும் ஒரு தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதில், அவர்களிடமிருந்து முரண்பாடான விளக்கம் கிடைத்ததோடு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

இதனால், அம்மூவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

''விசாரணையில், கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி மற்றும் கூலிமிலும், பினாங்கில் புக்கிட் மெர்தாஜாம் மற்றும் பட்டர்வெர்த்திலும் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சில சோதனை நடவடிக்கைகளில் போலீசார் குழுத் தலைவர் உட்பட 12 ஆடவர்களை கைது செய்திருக்கின்றனர்,'' என்று அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

-- பெர்னாமா