சிறப்புச் செய்தி

உலக இறைச்சி இல்லா நாள்

26/11/2020 10:25 PM

பினாங்கு, 26 நவம்பர் (பெர்னாமா) -- உலகம், முழுவதும் நவம்பர் 25-ஆம் தேதி உலக இறைச்சி இல்லாத நாளாக அனுசரிக்கப்படுகிறது.

நம் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யும் பொருட்டு, மலேசியர்களும் இறைச்சி உண்பதை குறைத்துக் கொள்ளுமாறும், முடிந்தால் இறைச்சி உண்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்வதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

மக்களிடையே பெருகி வரும் வளமான வாழ்வின் காரணமாக இறைச்சி உண்பது அதிகரித்துள்ளது.

உதராணமாக, மலேசியாவில் வருடத்திற்கு ஒருவர் உண்ணும் இறைச்சியின் அளவு 1961 கிராம் முதல் 13.2 கிலோகிராமாக இருக்கின்றது.

மலேசியர்களின் வருமானம் அதிகரித்து வரும் காரணத்தால் எதிர்காலத்தில் மலேசியர்கள் இன்னும் அதிகமான இறைச்சி சாப்பிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இறைச்சி உண்பதற்குச் சுவையாக இருந்தாலும் அதனால், பிராணிகள் மட்டுமல்லாமல் அதனை உட்கொள்ளும் மனிதர்களும் அதிகமான துன்பங்களை சந்திக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, இறைச்சி சாப்பிடுவதால் மனிதர்கள் உடல் பருமன், இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் இன்னும் பல தீவிர நோய்களுக்குள்ளாகின்றனர்.

இறைச்சி அதிகம் உட்கொள்ளும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இருதய நோயும் புற்றுநோயும் அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதோடு, இறைச்சிகள், குறிப்பாக பதனம் செய்யப்பட்ட இறைச்சிகள் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்குப் போதிய சான்றுகள் இருப்பதாக அனைத்துலக புற்றுநோய் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்தைக் குலைப்பதோடு, அது சுற்றுச்சூழலுக்குப் பெருத்த கேட்டினை விளைவிக்கிறது என்பதனை பெரும்பாலான பயனீட்டாளர்கள் உணராமல் இருக்கின்றனர்.

இறைச்சிக்காக பிராணிகளை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

சில அறுப்புக்கொட்டகைகளில் நாளுக்கு 85,000 கால்நடைகளின் தலைகள், 7,000 பன்றிகள் மற்றும் 12 மில்லியன் பறவைகள் பலி கொடுக்கப்படுகின்றன.

ஆனால் இந்தத் தொழிற்துறைகள் மக்களின் பார்வையிலிருந்து மறைத்தும் வைக்கப்படுகின்றன.

கால்நடை தொழிற்துறை வளர்ச்சிக்கு நாம் நிறைய வளங்களை அழித்துவிட்டோம். சூழல் மண்டலத்தையும் பாழ்செய்துவிட்டோம்.

இறைச்சி உற்பத்தியும் மிகவும் திறனற்ற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 6.5 கிலோ தானியங்கள், 36 கிலோ தவிடு மற்றும் 15,500 கனப்பகுதி தண்ணீரும் தேவைப்படுகிறது.

உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் 70 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி கால்நடைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்திக்கும் இரு செயல்பாடுகள் உள்ளன.

கால்நடைகளை அறுக்கும் வரைக்கும் அச்சக்தி மோசமான சூழ்நிலையிலும் பிழைத்திருக்க உதவுவதோடு, அவை விரைவில் வளரவும் உதவுகின்றன.

மனிதர்களை விட பிராணிகளுக்குத்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அதேவேளையில், பிராணிகளின் பாகங்கள் பிராணிகளுக்கே உணவாக அளிக்கப்படுகின்றன.

இறைச்சி பெரும்பாலோருக்கு சுவையான உணவு.

இறைச்சிகளின் உருவாக்கத்தில் இருக்கும் படிகளை மக்கள் உணராத பட்சத்தில் இறைச்சி உண்பதிலிருந்து அவர்களுக்குத் தயக்கம் இருக்காது.

அவர்கள் வாங்கும் இறைச்சிகளைப் பற்றியும் அவர்கள் பெரிதாக தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.

சுற்றுச்சூழல் நாசம் மற்றும் பிராணிகளுக்கு குப்பைகளை உணவாகக் கொடுப்பது பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

ஒருவர் சைவ உணவை மட்டுமே உண்டு மிக நல்லவராக மாறலாம் என்று கூறுவதற்கும் இல்லை.

இன்று இறைச்சி இல்லாத நாள்.

ஆகையால், பயனீட்டாளர்கள் இறைச்சி உண்பதை கணிசமான அளவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் கருதி முடிந்த வரையில் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதனிடையே, நம்முடைய நாக்கின் சுவைக்காக கொல்லப்படும் கோடிக்கணக்கான பிராணிகளின் நிலையையும் இந்நாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா