மீ கரியின் இறைச்சியில் பன்றி இறைச்சி அமிலம் சேர்க்கப்படவில்லை- KPDNHEP உறுதி

24/11/2020 05:11 PM

சுபாங் ஜெயா, சிலாங்கூர், 24 நவம்பர் (பெர்னாமா)-- தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வரும், சிலாங்கூர், சுபாங் ஜெயா பகுதியிலுள்ள ஓர் உணவகத்தின் மீ கரியின் இறைச்சியில், 'டியொக்சிரைபோநூக்கிலிக்' எனும் ஒரு வகை பன்றி இறைச்சி அமிலம் சேர்க்கப்பட்டுள்ளது எனும் தகவல் உண்மையற்றது. 

இதனை உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சு (KPDNHEP) இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 

வேதியியல் துறையின் ஆய்வு பரிசோதனை முடிவில், அந்த உணவகத்தின் இறைச்சியில் கோழியின் மரபனு சார்ந்த உட்பொருள்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பது முற்றிலும் நிரூபனம் செய்யப்பட்டுள்ளதாக அவ்வமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர், டத்தோ இஸ்கண்டார் ஹலிம் சுலைமான் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

2011-ஆம் ஆண்டு வர்த்தக விளக்கம் ஆணையின் ஹலால் வரையறை அல்லது ஹலால் சான்றிதழ் மற்றும் குறித்தல் உத்தரவின் கீழ், அந்த உணவகம் சட்டத்தை மீறும் வகையில் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்று  டத்தோ இஸ்கண்டார் பகுப்பாய்வின் முடிவைத் தொடர்புப்படுத்தி விளக்கினார்.

மேலும், இது போன்ற உண்மையற்ற தகவல் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பெரும் வகையில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், மக்கள் சமூக ஊடகங்களில் தகவலைப் பகிரும் போது, அதனின் உண்மை நிலையை ஆராய்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வர்த்தக விளக்கம் ஆணையின் ஹலால் சட்டத்தை அனைத்து உணவகம் மற்றும் குளிர்பான கடையின் வணிகர்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, KPDNHEP-யின் மேற்கட்ட கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா