அரசியல்

இடைத் தேர்தல்களை ஒத்தி வைக்க அவசரக்கால பிரகடனம் குறித்து பரிசீலனை

24/11/2020 02:19 PM

நாடாளுமன்றம், கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- பேரா, கிரிக் நாடாளுமன்றம் மற்றும் சபா, புகாயா சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களை ஒத்தி வைக்க அவசரக்கால பிரகடனத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

அண்மையில், சபாவில் பத்து சாப்பி நாடாளுமன்றத்தின் இடைத் தேர்தலை ஒத்தி வைக்க அரசாங்கம் அவசரக்கால பிரகடனத்தை அறிவித்திருந்தது.

எனினும்,  சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இடர் மதிப்பீட்டைச் சார்ந்தே அம்முடிவு அமையும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோ தாக்கியுடின் ஹாசான் தெரிவித்திருக்கிறார். 

சபாவில் கொவிட் 19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, பத்து சாப்பி இடைத் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக, அரசியலமைப்பு சட்டத்தின் 150-ஆவது பிரிவைப் பயன்படுத்தி, அத்தொகுதியில் அவசரக்காலத்தை அறிவிப்பது தொடர்பில் மாமன்னருக்கு ஆலோசனை வழங்குமாறு அமைச்சரவைப் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினைக் கேட்டுக் கொண்டதாக டத்தோ தாக்கியுடின் தெரிவித்தார்.

"தேர்தல் பணியாளர்களைப் பெறுவதில் மலேசிய தேர்தல் ஆணையம் சிரமத்தை எதிர்நோக்கியது. பத்து சாப்பி வாக்களிப்பு மையங்களில் கொவிட் 19 தொற்று பரவலாம் என்று அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். இதே நிலைமை கிரிக் நாடாளுமன்றம் மற்றும் புகாயா சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும் ஏற்படலாம்," என்று டத்தோ தக்கியூடின் ஹசான் கூறினார். 

செவ்வாய்க்கிழமை மக்களவைக் கேள்வி நேரத்தின்போது பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போது தக்கியூடின் இதனைத் தெரிவித்தார். 

பத்து சாப்பி இடைத் தேர்தலை ஒத்தி வைக்க அவசரக்கால பிரகடனத்தைப் பயன்படுத்தியதைப் போல், கிரிக் நாடாளுமன்றம் மற்றும் புகாயா சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அவசரகாலத்தை அறிவிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதா என்று அஹ்மாட் மஸ்லான் கேள்வி எழுப்பினார். 

பத்து சாப்பி நாடாளுமன்றம், புகாயா சட்டமன்றம், கிரிக் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களின்போது வாக்களிப்பு மையங்களில் கொவிட் 19 தொற்று பரவலாம் என்று வாக்களார்களும் அச்சம் கொண்டிருப்பதாகத் தக்கியூடின்  தெரிவித்தார். 

அதேவேளையில், வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் 50 விழுக்காடாகக் குறையும் என்றும் கணிக்கப்படுவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா