அரசியல்

2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்களவையில் நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும்? 

23/11/2020 08:18 PM

கோலாலம்பூர், 23 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய அரசியல் வரலாற்றில் வரும் நவம்பர் 26-ஆம் தேதி வியாழக்கிழமை மிக முக்கியமான நாளாக அமையவுள்ளது.

பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்துள்ள 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று மக்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். 

பத்து சாப்பி மற்றும் கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணரமடைந்திருப்பதால், தற்போதைய  நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 220 ஆக குறைந்துள்ளது.

நவம்பர் 6-ம் தேதி தொடங்கி மக்களவையில் நடைபெறும் வரவு செலவு திட்டம் மீதான விவாதங்களை வைத்துப் பார்க்கும் போது, அது அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் குறைவாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்களும், பார்வையாளர்களும் கருதுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்திருந்தாலும், பெரிக்காத்தான் நேஷனல்  அரசாங்கத்தில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தேசிய முன்னணியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முகிடின் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பார்களா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

முகிடினுக்கு எதிராக 25 நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை, 2021 வரவு செலவு மசோதா மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறத் தவறி நிராகரிக்கப்பட்டால், முகிடின் பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்.

அவ்வாறு நடந்தால், பிரதமரின் பதவி விலகலைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் இயல்பாகவே தங்களது பதவிகளை இழப்பார்கள். அதுவே நடைமுறை சட்டமும் கூட.
 
பிரதமர் பதவியில் இல்லாத நிலையில் கூட்டரசு அரசியலமைப்பின் 150-வது சட்ட விதியை காட்டி அவசரகால சட்டத்தை அமல் செய்யும் படி மாமன்னரிடமும் முகிடின் கோரிக்கை எதனையும் முன் வைக்க முடியாது.

முகிடின் பதவி விலகியதும், மாமன்னர் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும். நியமிக்கப்படும் புதிய பிரதமர், காலம் தாழ்த்தாது டிசம்பர் மாத தொடக்கத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு மாமன்னரிடம் பரிந்துரை செய்வார்.

பின்னர், கூட்டரசு அரசியலமைப்பு விதி 102 (a)-ன் கீழ், 2021 ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஏறக்குறைய இதே போன்ற ஒரு சம்பவம் 1999 ஆம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

2000-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அது மக்களவையில் ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இது வரலாறு.

எழுத்து: எம்.விவேகானந்தன்

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாகும். பெர்னாமாவின் கருத்தை பிரதிபலிக்கவில்லை

எழுத்தாளர் சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு நிலையிலான அரசாங்க பணிகளில் பணியாற்றியுள்ளார். ஆங்கில ஊடகங்களிலும் இவரது அரசியல் கண்னோட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

-- பெர்னாமா