உலகம்

ஜி20 மாநாடு: ஏழ்மையான நாடுகள் பெற்ற கடனை 2021-ஆம் அரையாண்டு வரை திரும்பச் செலுத்தத் தேவையில்லை

22/11/2020 08:17 PM

டோஹா, 22 நவம்பர் (பெர்னாமா) -- கொவிட்19 நோய் எதிரொலியால் ஏழ்மையான நாடுகள் பெற்ற கடனை 2021-ஆம் அரையாண்டு வரை திரும்பச் செலுத்தத் தேவையில்லை என்று, இவ்வாண்டுக்கான ஜி20 உச்சநிலை மாநாட்டில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்கும், அம்மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

ஏழ்மையான நாடுகள் பெற்ற கடன் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு, பொதுவான  அணுகுமுறை ஒன்றைக் கையாளுவதற்கு ஜி20 நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருக்கிறன.

கொவிட்-19 நோயிற்கான மருத்துவ கருவிகள் குறைந்த மற்றும் சமமான முறையில் அனைவருக்கும் கிடைப்பதை ஜி20 நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய சவூதி அரேபிய மன்னர் சல்மான் கேட்டுக் கொண்டார்.

சவூதி அரேபியா தலைமையில் இயங்கலை வழியாக நடைபெறும் இவ்வாண்டுக்கான ஜி20 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் உட்பட 20 நாடுகள் கலந்து கொண்ட வேளையில், ஜோர்டான், சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டன.

சீனா

சீனா, தியான்ஜின் நகரில் வாழும் 30 லட்சம் மக்களுக்கு கொவிட்-19 நோயை கண்டறிவதற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நகரில் உள்ள 11 பேருக்கு கொவிட் 19 நோய் கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் வேளையில், இந்த பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜப்பான்

தொடர்ந்து மூன்றாவது நாட்களாக, ஜப்பானில் பதிவு செய்யப்படும் கொவிட்19 நோய் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, அந்நாட்டின் பிரதமர் யொஷியிடெ சுகா தெரிவித்திருக்கிறார்.

தோக்கியோவில் பதிவாகிய 539 கொவிட்19 சம்பவங்களுடன், அந்நாட்டில் சனிக்கிழமை மட்டும் 2418 சம்பவங்கள்  பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கட்டார்

வெகு நாட்களாக நீடித்து வரும் பிரச்சனைகளுக்கு முடிவு காணும் நோக்கில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பெயோ, தலிபான் அமைப்புடன் சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருந்தாலும், இம்முறை இரு தரப்பும் சுமுகமான முடிவுகளுக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா