பொது

உணவகத்துறைக்கும் அரசாங்கம் கூடுதல் நிதிவுதவிகளையும் சலுகைகளையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்

31/10/2020 07:45 PM

கோலாலம்பூர், 31 அக்டோபர் (பெர்னாமா) --உள்நாட்டவர்களால் வேலை செய்ய இயலாத தோட்டத் தொழில் துறையில் குறிப்பாக செம்பனை மற்றும் ரப்பர் தோட்டத்தில் பணிபுரிவதற்கு சட்டவிரோத அந்நிய நாட்டவர்களுக்கு தற்காலிக பெர்மிட்டுகளை வழங்கி, வேலைக்கு அமர்த்தலாம் என்ற அரசாங்கத்தின்  முடிவு வரவேற்கக்கூடியது.

அதேபோன்று, பெரும் சவால்களை எதிர்நோக்கி வரும் உணவகத்துறைக்கும் அரசாங்கம் கூடுதல் நிதிவுதிகளையும் சலுகைகளையும் ஒதுக்கீடு செய்தால், அத்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று PRIMAS  எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் முத்துசாமி திருமேனி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் பணப்புழக்க பிரச்சினையையே அதிகம் எதிர்நோக்கி வருகின்றனர்.

எந்த  வியாபாரமாக இருந்தாலும் பணப்புழக்கம் முழுமையாக இல்லாத நிலையில் திட்டமிட்டபடி அந்த வியாபாரத்தில் முழுமையாக ஈடுபட முடியாது.

''உணவுகத் துறையைப் பொருத்தவரையில், வியாபாரம் சரிபாதியாக குறைந்துவிட்டாலும் சில அம்சங்களில் செலவுகள் இன்னும் அதிகரித்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையை சீர்படுத்த கூடுமானவரை வங்கிகளிலோ அல்லது அரசாங்க நிதி நிறுவனங்களிலோ குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி கிடைக்க, விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் வரவு-செலவு திட்டத்தில் பரிசீலிக்க வேண்டும்,'' என்று முத்துசாமி கேட்டுக் கொண்டார்.

''இவ்வாண்டு இறுதி வரை லெவி கட்டணத்திற்கு அரசாங்கம் 25 விழுக்காடு கழிவு வழங்கியுள்ளது. தற்போதை சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில் உணவகங்கள் பழைய நிலைக்கு மீள குறைந்தபட்சம் ஓராண்டு காலம் வரையிலாவது அவகாசம் தேவைப்படும். எனவே, அடுத்த ஆண்டு இறுதி வரை லெவி கட்டணத்திற்கான கழிவை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்துமாறு,'' அவர் கேட்டுக் கொண்டார்.

உணவகங்கள் சரிவர இயங்காத நிலையில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் கூடுதல் நிதிச் சுமையை அளிக்கிறது.

வருமானமே இல்லாத நிலையில் மின்சாரக் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு நெருக்குதல் கொடுத்து வரும் TENAGA NASIONAL  நிறுவனத்துடன் அரசாங்கம் கலந்தாலோசித்து மாதத் தவணையை நீட்டிக்க வகைச் செய்ய வேண்டும் என்று முத்துசாமி கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் இந்திய உணவகங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து அதற்கு உரிய தீர்வு காணும் என்று ஒட்டுமொத்த உணவக உரிமையாளர்களின் சார்பில் தாம் எதிர்பார்ப்பதாக முத்துசாமி கூறினார். 

-- பெர்னாமா