உலகம்

மக்களின் வழக்கமான வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பேன் -டிரம்ப் உறுதி

31/10/2020 04:47 PM

மினசோட்டா (அமெரிக்கா), 30 அக்டோபர் (பெர்னாமா) --கொவிட்-19 நோய்த் தொற்றினால் அச்சத்தில் இருக்கும் நாட்டு மக்களுக்கு வழக்கமான வாழ்க்கைச் சூழலை மீட்டுக் கொடுக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்  உறுதியளித்திருக்கிறார்.

இந்நோய்க்கான தடுப்பு மருந்தை விரைவில் மக்களுக்கு வழங்கி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் அனுபவித்த சாதாரண வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கவிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

''எனது திட்டத்தின் கீழ், சில வாரங்களில் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பான தடுப்பு மருந்து வழங்குவோம். அது சிறப்பு அம்சம் வாய்ந்ததாக இருக்கும். தடுப்பு மருந்து அல்லது அது இல்லாமல் நோய்த் தொற்றை கையாள முடியும். தடுப்பு ,மருந்து கிடைக்கப்போகிறது. ஆனால், அது இல்லாமல் கூட நோயைத் தடுக்க முடியும். முதலில் முதியவர்கள் அதனைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அது இலவசமாகத்தான் வழங்கப்படும்,'',என்று அவர் குறிப்பிட்டார்.

மினசோட்டாவில் (MINNESOTA) நடைபெற்ற பிரச்சாரத்தின்போது டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோரை பலியாக்கும் கொவிட்-19 நோயிலிருந்து நாடு மீண்டு வருகிறது என்று டிரம்ப் நம்பிக்கைத் தெரிவித்து வருகிறார். தடுப்பு மருத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் சில வாரங்களில் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விஸ்கான்சின் (அமெரிக்கா)

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இத்தேர்தலில் அபார வெற்றி பெற வேண்டும் என்று ஜோ பிடென் (JOE BIDEN) வெள்ளிக்கிழமை வின்கான்சினில் (WISCONSIN) நடைபெற்ற பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

இதுவரை எட்டு கோடியே 50 லட்சம் மக்கள் வாக்களித்திருப்பதாகவும், இன்னும் லட்சக்கணக்கிலான மக்கள் வாக்களிக்கவிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தங்களின் வாக்களிக்கும் சக்தியைக் கொண்டு நாட்டின் நிலையை மாற்றலாம் என்றும் குறிப்பிட்டார்.

--பெர்னாமா