பொது

நீலாயில் ஒன்பது வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன

30/10/2020 07:49 PM

நீலாய், 30 அக்டோபர் (பெர்னாமா) -- நிபந்தனைக்கு உட்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவு, PKPB அமல்படுத்தப்பட்டிருக்கும் நெகிரி செம்பிலான், நீலாயில், புதன்கிழமை தொடங்கி ஒன்பது வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

டெசா மெலாத்தி, டெசா செம்பாக்கா, டெசா ஜஸ்மீன் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று கோவில்களும், பண்டார் பாரு நீலாய் சுற்று வட்டாரத்திலுள்ள ஆறு தேவாலயங்களும் மூடப்பட்டிருப்பதாக, நெகரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார் தெரிவித்திருக்கிறார்.

நீலாயில் அதிகரித்து வரும் கொவிட்-19 சம்பவங்களை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அருள் குமார் தெரிவித்தார்.

ஆகவே இப்பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

" நீலாயில் அதிகமான கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருகிறது. ஆகவே அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," அருள் குமார் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான், நிலாயில், வெள்ளிக்கிழமை, நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நிலாயில், 35 பகுதிகளை உட்படுத்தி, PKPB அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளையில், அதிகமான கொவிட்-19 சம்பவங்களை பதிவுச் செய்த ஊழியர்கள் தங்குமிடத்தை உட்படுத்திய புத்ரா போயிண்டில் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரையில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, PKPD-யில் அமலில் உள்ளது.

-- பெர்னாமா