BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
சிறப்புச் செய்தி

முகிடினுக்கு ஆதரவாக அன்வார் செயல்படுவாரா?

29/10/2020 04:51 PM

கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆதரவைக் கோரும் தவிர்க்க முடியாத நிர்பந்தத்திற்கு பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தள்ளப்பட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக 16 நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு வழியில்லாது, அன்வாரின் ஆதரவை  முகிடின் நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

அம்னோ நாளுக்கு நாள் புதிய கோரிக்கைகளையும் நெருக்குதல்களையும் வெவ்வேறு வழிகளில் பிரதமருக்குக் கொடுத்து வருவது நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு பாதகாமாகவே அமைகின்றது.

மேலும், தற்போதைய அமைச்சரவையில் முக்கிய அமைச்சுகள் அம்னோவுக்கு ஒதுக்கப்படவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அக்கட்சி, தற்போதைய சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் உறுதியாக இருப்பதும் கண்கூடு. 

அம்னோ தற்பொழுது முகிடினுக்கு பல வழிகளில் மன உளைச்சலைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறது. 

கடந்த தேர்தலில் அம்னோவின் படுதோல்விக்குப் பிறகு, அம்னோ உச்சமன்ற பதவி எதற்கும் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன்.

பின்னர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியுடன் சேர்ந்து ''ஷெரத்தோன் மூவ்'' வழியாக முகிடின் அரசாங்கத்தில் இணைந்து ஹிஷாமுடின் வெளியுறவு அமைச்சராகிவிட்டார். 

முக்கிய அமைச்சுகள் எல்லாம் அம்னோவுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கட்சி முரண்டு பிடிக்கிறது.

இதனால், மிரண்டு போயுள்ள முகிடின், அன்வாரிடம் நட்பு கரத்தை நீட்ட முடிவு எடுத்துவிட்டார். 

இதனிடையே, இன்னும் மூன்று அம்னோ தலைவர்கள்  துணைப் பிரதமர் பதவி கேட்டு அரசியல் சதுரங்க காய்களை மிகச் சாதுரியமாக நகர்த்தி வருகிறார்கள். டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி, டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான்,  டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரே அம்மூவர் ஆவர்.

துணைப் பிரதமராக்க சாஹிட் ஹமிடியை முகிடின் அவ்வளவாக விரும்பவில்லை. அவர் மீது நீதிமன்றத்தில் பல ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் இருப்பது அதற்கு காரணம். நால்வரில் எவரைத் துணைப் பிரதமராக நியமிப்பது என்ற சிக்கலில் சிக்கியுள்ளார் முகிடின்.

நிலைமை இப்படி இருக்க அன்வார் இப்ராஹிமிடம் தஞ்சம் புகுவதே மேல் என்ற முடிவுக்கே கிட்டதட்ட வந்து விட்டார் முகிடின். அதிலும் பிரச்சனை, அதற்கு முட்டுகட்டையாக முகிடினை அன்வாரிடம் நெருங்க விடுவதில்லை என்பதில் அவரது அமைச்சர்களில் சிலர் குறியாக உள்ளனர்.

முகிடின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் வேளையில், அரசாங்கம் தாக்கல் செய்யவுள்ள வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட எதிர்கட்சியினரின் ஆதரவு மிகவும் அவசியம் என்பது முகிடினுக்கு நன்கு புரிந்து வைத்துள்ளார். 

அவரைக் காப்பாற்ற பாக்காத்தான் ஹராப்பானுக்கு தலைமையேற்றுள்ள அன்வார் இப்ராஹிம் ஒருவரால் மட்டும்தான் இயலும் என்பதையும் அவர் நன்கு உணர்ந்துள்ளார். 

நடப்பு அரசியல் நிலவரங்களைப்  பார்க்கும்போது, மிக விரைவில் முகிடின் அன்வாருக்கு இடையிலான புதிய அரசியல் புரிந்துணர்வு மலர்வதற்கான சாதகமான சூழ்நிலை பிறந்துள்ளது என்பது  தெளிவாகத் தெரிகிறது.

எழுத்து: எம்.விவேகானந்தன்

எழுத்தாளர் சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு நிலையிலான அரசாங்க பணிகளில் பணியாற்றியுள்ளார். ஆங்கில ஊடகங்களிலும் இவரது அரசியல் கண்னோட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாகும். பெர்னாமாவின் கருத்தை பிரதிபலிக்கவில்லை