சிறப்புச் செய்தி

வீட்டிலிருந்து வேலைச் செய்வதில் அதிகமான சவால்களை எதிர்நோக்குவது ஆண்களா? பெண்களா?

28/10/2020 07:51 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, PKPB அமலில் உள்ள மாநிலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீண்டும் வீட்டில் இருந்து வேலைச் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இதனால், பல வீடுகள் தற்போது அலுவலகங்களாக மாறி இருக்கின்றன.

வீட்டிலிருந்து வேலைச் செய்வது சாத்தியமாகுமா என்று விவாதிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், இந்த அனுமதியினால் எந்த தரப்பினர் அதிகமான சவால்களை எதிர்நோக்கக் கூடும்?

ஆண்களா? பெண்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது குறித்து பெர்னாமா தமிழ் செய்தி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது.

கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிர்வாகத் துறை அல்லது அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கி, PKPB நிறைவடையும் வரையில், வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட்-19 நோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது பணியாளர்களுக்கு பெரும் சவால். அலுவலக பணியோடு, வீட்டு வேலைகளையும் கூடவே பிள்ளைகளை கவனித்துக்கொள்வதும் தவிர்க்க முடியாது என்பதால், இப்புதிய பணி இயல்பில் பெண்களே மிகுந்த சவாலை எதிர்நோக்குவதாக பெர்னாமா தமிழ்ச்செய்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.

பெண்களே வீட்டிலிருந்து வேலை செய்வதில் பெரும் சவாலை எதிர்கொள்வதாக, சுமார் 87 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். ஆண்களுக்கு 13 விழுக்காடு வாக்குகளே கிடைத்துள்ளன.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புடன் சேர்த்து, தற்போது அலுவலக பணியும் ஒரே சமயத்தில் செய்யும் சூழ்நிலைக்கு, பெண்கள் தள்ளப்பட்டிருப்பதாக, அக்கருத்துக் கணிப்பில் சிலர் பதிவிட்டிருக்கின்றனர். ஆயினும், இக்காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் சமமான சவால்களை எதிர்நோக்குவதாக, சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

"நான் நினைக்கிறேன் இருவருமே சமமான சவால்களை எதிர்நோக்குகிறார்கள். வீட்டு பணிகளையும் அலுவலக பணிகளையும் இருவரும் சரிசமமாக பார்த்துக் கொள்கிறார்கள்,"  என்று ரேவதி கிருஷ்ணசாமி கூறினார்.

''ஒரு ஆண் அல்லது ஒரு பெண் என்ற பாகுபாடு இன்றி இருவருமே சமமான சவால்களை எதிர்நோக்குகிறார்கள். வீட்டில் பணிப்புரியும் போது வீட்டுப் பணிகளையும் அலுவலக பணிகளையும் ஒரே சமயத்தில் கவனித்து கொள்ளலாம்,'' என்கிறார் லிம் வீ ஜென்.

இக்காலகட்டத்தில், அதிகம் சவாலை எதிர்நோக்கியவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற விவாதத்தைக் கடந்து, மக்கள் அனைவருமே சவால்களை எதிர்நோக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்துச் செயல்பட்டால், அலுவல் சுமையோடு, குடும்ப சுமையும் குறையும் என்றும் சிலர் குறிப்பிட்டனர்.

-- பெர்னாமா