சிறப்புச் செய்தி

இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் பணி ஓய்வு பெறுகிறார்

27/10/2020 08:31 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா)  -- மலேசிய தமிழ்மொழி வளர்ச்சிக்கும் இந்திய சமூக மேம்பாட்டிற்கும் அரனாக விளங்குவது, மலாயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை என்றால் அது மிகையாகாது.

இத்துறையில் பல நூறு இந்திய மாணவர்கள் படித்து பட்டம் பெறவும், அவர்களில் பலர் இன்று சிறந்த நிலையில் இருப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர், அதன் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம்.

அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்து வந்த அவர் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

மலாக்கா அசகானை பூர்விகமாக கொண்ட முனைவர் கிருஷ்ணன் மணியம் முதன் முதலாக 1981ஆம் ஆண்டு மலாக்கா, ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்தார்.

1984ஆம் ஆண்டு மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் ஒரு பயிற்சியாளராக தனது சேவையை தொடங்கிய அவர், விரிவுரையாளர், இணைப் பேராசிரியராக இருந்து, இத்துறைக்கு மூன்று முறை தலைவராக பொறுப்பேற்று, ஆக்ககரமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

மலாயா பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், தமிழ்நாடு MADRAS பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

நவீன தமிழ் இலக்கியம், மலாய் மற்றும் இந்திய இலக்கியம் ஒப்பீடு, மலேசிய இந்தியர்களின் சமூக வரலாறு, மலேசிய இந்தியர்களிடையிலான அரசியல் விழிப்புணர்வு ஆகியவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் முனைவர் கிருஷ்ணன் மணியம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

''மலாயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் நான் 40 ஆண்டு காலம் பணிப்புரிந்திருக்கிறேன். இனிய நினைவுகளுடனும் மனநிறைவுடனும் ஓய்வு பெறுகின்றேன்,'' என்றார் அவர்.

சமுதாயம் பயன்பெறும் பல நூல்களை வெளியிட்டிருக்கும் அவர் பல நூல்களையும் ஆய்வு செய்திருக்கிறார்.

தமிழ் பேரவையின் சிறுகதை போட்டிக்கு பல ஆண்டுகளாக தலைமை நீதிபதியாகவும் பொருப்பேற்றிருந்தார்.

இந்திய ஆய்வில் துறையில் அறக்கட்டளைகள் நிறுவவும், காலத்திற்கு ஏற்ற பாடத் திட்டங்களை அறிமுகபடுத்தும் பல முயற்சிகளை மேற்கொண்ட இவர், தமது சக விரிவுரையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கிருஷ்ணன் மணியம் தலைமைத்துவ மிக்கவராகவும், இந்திய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தார் என்று இந்திய ஆய்வியல் துறையின் புதிய தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் முனைவர் மணிமாறன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

''இவர் முதலில் ஒரு நல்ல மனிதராகவும், தலைமைத்துவம் வாய்ந்தவராகவும், மாணவர்களுக்கு ஒரு தந்தையை போன்று இருந்து வந்தார். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டார்,'' என்றார் மணிமாறன்.

பல்கலைக் கழகத்தில் தங்களது வழிகாட்டியாக இருந்து வந்த முனைவர் கிருஷ்ணன் மணியம் மாணவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று அவரது மாணவர்களின் சிலர் புகழாரம் சூட்டினர்.

பணி ஓய்வு பெறும் முனைவர் கிருஷ்ணன் மணியம் தமிழ் மொழிக்கும், மலேசிய இந்திய சமூகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற பெர்னாமா செய்திகள், வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.

--பெர்னாமா