பொது

10ஆம் ஆண்டில் கம்பீர மிடுக்குடன் காட்சியளிக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா 

27/10/2020 07:50 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) --மலேசிய இந்தியர்களின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்வது கோலாலம்பூரில் இருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதி ஆகும். 

சுற்றுலாத் தளமாகவும், இந்தியர் பண்பாட்டைச் சார்ந்த மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் சிறப்புக்குரிய இடமாக இருந்து வரும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவின் தோற்றம் உருவாக்கப்பட்டு இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

2010-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, லிட்டல் இந்தியாவாக உருமாற்றம் கண்ட இப்பகுதியில் இன்று வரை இங்கே வியாபாரம் செய்யும் இந்திய வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. 

மேலும், உணவகங்கள், துணி கடைகள் மட்டுமின்றி பலவிதமான புதிய வணிகங்களும் லிட்டல் இந்தியாவில் இடம் பெற்றுள்ளன.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவாக உருமாற்றம் கண்டபின் இந்திய மக்களின் வற்றாத ஆதரவு அங்குள்ள வணிகர்களுக்கு இன்று வரையில் கிடைத்து வருவதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

''இங்குள்ள வணிகர்கள் அனைவரும் வியாபாரங்களை மேம்படுத்த வேண்டும்; நலிவடைந்த வணிகங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இங்குள்ள வணிகர்களுக்கு நல்ல ஒத்துழைப்பை முழுமனதுடன் வழங்கிய டத்தோ ஶ்ரீ எம்.சரவணனுக்கு வியாபாரிகள் அனைவரும் நன்றிகடன் பட்டிருக்கின்றோம்,'' என்று ஶ்ரீ  பாண்டி உணவக உரிமையாளர் குமார் என்ற அழகர்சாமி தெரிவித்தார்.   

''நான் இங்கு 2005ஆம் ஆண்டு முதல் வியாபாரம் செய்து வருகின்றேன். லிட்டில் இந்தியாவாக உருமாற்றம் கண்டபின் வியாபாரங்கள் மிகவும் மேம்பாடடைந்துவிட்டன. பாரம்பரியம், பண்பாடு சார்ந்த பொருட்கள் அனைத்தும் இங்கே கிடைப்பதால் நிறைய மக்கள் இங்கே வருகின்றனர்; வியாபாரமும் சிறப்பான முறையில் நடக்கின்றது,'' என்றார் பூக்கடை உரிமையாளர்  சிவானந்தம் ஆறுமுகம்,

 ''முன்பைவிட இப்பொழுது கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கடைகள் பல மேம்பாடடைந்துவிட்ட நிலையில் மேலும் நிறைய மக்களை எதிர்ப்பார்க்கின்றேன்,'' என்று வனிதா முருகையா குறிப்பிட்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் முன்னாள் கூட்டரசு பிரதேச மற்றும் நகர்புற நல்வாழ்வு துணையமைச்சரும், தற்போதைய மனிதவள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தலைமையில் நடைபெற்ற லிட்டல் இந்தியா திறப்பு விழாவில் நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.  

 - பெர்னாமா