அரசியல்

பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது

26/10/2020 05:37 PM

புத்ராஜெயா, 26 அக்டோபர் (பெர்னாமா) --அவசரகால பிரகடனத்தை அமல்படுத்த தேவை இல்லை என்ற மாமன்னரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று பெர்டானா புத்ராவில் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தலைமையில்  அமைச்சர்களுடனான சிறப்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

காலை 11.30 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.

அமைச்சர்களுடனான கூட்டத்திற்கு முன்னர் பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங்  மற்றும் ம.இ.கா. தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோருடன் முகிடின் சந்திப்பு நடத்தியதாக நம்பப்படுகிறது.

முகிடின் வந்தடைந்த 10 நிமிடங்களில், அப்துல் ஹடி மற்றும் விக்னேஸ்வரனை ஏற்றி வந்த வாகனங்கள் பெர்டானா புத்ராவினுள் நுழைந்ததைக்  காண முடிந்தது.

அவர்கள் இருவரும் காலை சுமார் 11.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து, சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா, ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாடிக், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன்  மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் ஆகியோரின் வாகனங்களும் பெர்டானா புத்ராவினுள் நுழைந்ததைக் காண முடிந்தது.

அதோடு, தேசிய சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ இட்ருஸ் ஹருனும் அங்கு காணப்பட்டார்.

 - பெர்னாமா