அரசியல்

அவசர கால பிரகடன முடிவை மறுபரிசீலிப்பீர் - ம.இ.கா வேண்டுகோள்

25/10/2020 06:10 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசியாவில் கொவிட்-19 பெருந்தொற்று பரவுதலைத் தவிர்க்க அவசர கால பிரகடனம் அமல்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ தி.முருகையா அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, அவர் இது போன்ற முடிவை அனைத்து முக்கிய தரப்பினர்களிடத்தில் கலந்தாலோசித்த எடுக்குமாறு கூறியுள்ளார். 

"கடந்த சில நாட்களாக தேசிய கூட்டணி அரசாங்கம் அவசர கால பிரகடனத்தை அமல்படுத்தலாமல் என்ற உண்மை நிலையற்ற கருத்துகள் மலேசியர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவசர கால பிரகடனத்திற்கு பல்வேறு வரையறைகள் இருந்தாலும், அவை யாவும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும்தான் பாதிப்பினை ஏற்படுத்தும். அதேவேளையில், பொருளாதார ரீதியில் மலேசியா ஏற்றுமதி இறக்குமதியிலும் பின்னடைவு ஏற்படும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர கால பிரகடனம் அமல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மலாய் ஆட்சியாளர்களிடம் கலந்தாலோசித்து சொல்வதாக கூறிய மாமன்னரின் இறுதி முடிவுக்காக காத்திருக்கப்படுகின்றது.

மேலும்,  அரசியலமைப்பை பாதுகாக்கும் நாட்டின் ஜனநாயகம் செயல்படுவதை அனுமதிப்பதன் வழி, கொவிட்-19 பெருந்தொற்று பரவுதலுக்கு தீர்வு காணலாம் என்று அரசாங்கத்திடம் பரிந்துரைத்த அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் கருத்தையும் தாம்  ஏற்பதாக முருகையா  கூறினார். 

இத்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம், அரசியலமைப்பிலும் மக்களை அறிவியல் ரீதியில் பயிற்றுவிப்பதிலும் கூடுதல் முனைப்பு அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். 

- பெர்னாமா