பொது

பி.கே.பி.பி-யை மீறிய 688 பேர் கைது

25/10/2020 05:55 PM

புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி.பி (PKPB) அமலாக்கத்திலுள்ள பகுதியிலிருந்து அனுமதியின்றி மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்து பயணம் செய்ததற்காக அரச மலேசிய போலீஸ் படை 37 பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக போலீசார் கைது செய்த 688 பேரில் அவர்களும் அடங்குவர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட 688 பேரில், 678 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 10 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதில், 211 சுவாசக் கவசம் அணியாததற்காகவும், 213 பேர் தொடுகை இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காகவும், 136 பேர் சுய விவரக் குறிப்பை ஏற்படுத்திக் கொடுக்காததற்காகவும் 91 பேர் இதர குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதே வேளையில், OP BENTENG சோதனை நடவடிக்கையில் 10 அந்நிய நாட்டவர் கைது செய்யப்பட்டதோடு ஐந்து தரைப் போக்குவரத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அக்டோபர் 27 தொடங்கி நவம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அது நாளை, திங்கட்கிழமை PKPB நிறைவடையும் தவாவ், லஹாட் டத்து மற்றும் செம்போர்னா ஆகிய மாவட்டங்களையும் உட்படுத்தி இருப்பதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

-- பெர்னாமா