உலகம்

சில வெளிநாடுகளின் செய்தி தொகுப்பு

25/10/2020 05:58 PM

புதுடெல்லி, 25 அக்டோபர் (பெர்னாமா) --  பெருநாட்காலத்தில் கொவிட்-19 நோய் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருப்பதைத் தொடர்ந்து இந்தியாவில் துர்கா பூஜையும் தசரா விழாவும் இவ்வாண்டில் மிதமான அளவிலேயே கொண்டாடப்படுகிறது.

அந்நாட்டில் இத்திருவிழாக் கொண்டாட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் ஆலயங்களில் பூஜைகள் நடத்தப்படுவதை ஏற்பாட்டாளர்கள் பக்தர்களுக்கு இணையம் வழியாக ஒளிபரப்பினர்.

பெரும்பாலான மாநிலங்களில் அதிகமான மக்கள் கூட்டம் கூடும் பகுதிகளில் போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யாவில், கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சுகாதார ஊழியர்களுக்கு உதவ கிளினிக்குகளிலும் மருத்துவமனைகளிலும் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் பணி புரியத் தொடங்கி இருக்கின்றனர்.

சமராவில் இருக்கும் மருத்துவப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் மற்றும் கிளினிக்கில் பணி புரிந்து வருகின்றனர். 

அமெரிக்கா

அமெரிக்காவில் கொவிட்-19 பதிவு முறை சற்று பின் தங்கி இருப்பதாகவும் இதனால் இந்நோயால் அதிகமானோர் மரணமடைந்திருப்பதாக கூறப்படுவதாகவும் அந்நாட்டின் அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொடர்புடைய மரணம் என்றால், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் அதிகமான பணத்தை ஈட்டலாம் என்ற காரணத்தினால் ஆதாரம் எதுவுமின்றி சில இறப்புகள் இந்நோய்க் காரணமாக நிகழ்ந்ததென வகைப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

- பெர்னாமா