பொது

மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - பொன்.வேதமூர்த்தி

25/10/2020 05:34 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- அரசியல் வேறுபாட்டைக் களைந்து மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் பொருட்டு நடப்பு அரசாங்கம் எதிர்கட்சியுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அவசரகாலம் பிரகடனப்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்துவதற்காக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷாவின் அனுமதியைப் பெறுவதற்கான திடீர் முடிவு, மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அனைத்து செயல்பாட்டு தர விதிமுறைகளையும் நாட்டு மக்கள் சரியாக பின்பற்றி வருகின்றனர்.

மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை முழுமையாக பின்பற்றிய மக்களின் ஒத்துழைப்பு, அவர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக வேதமூர்த்தி விவரித்தார்.

நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மைக் குறித்து ஆராய்வதை விடுத்து, கொவிட்-19 பெருந்தொற்றைத் துடைத்தொழிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு பொருளாதார மீட்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

-- பெர்னாமா