பொது

கொவிட்19 : சிறு வணிக வியாபாரிகளின் நிலை இன்னும் மோசமாகியது

23/10/2020 08:36 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கும் வேளையில், சிறு வணிக வியாபாரிகளின் நிலை இன்னும் மோசமாகி உள்ளது.

குறிப்பாக கோலாலம்பூரில், உணவுக்கடை, பூக்கடை, மளிகை சாமான் கடைகள்  என்று, சிறு வணிகம் செய்யும் வியாபாரிகளின் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை வியாபாரிகளை பெரும் வேதனை அடையச் செய்திருப்பது பெர்னாமா தமிழ்ச்செய்தி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்துள்ளது.

மஸ்ஜிட் இந்தியா பகுதியில், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹமான் சாலையில், தினமும் மக்கள் கூட்டம் அலைமோதும் இடங்களில்,  வழக்கத்திற்கு மாறாக, இன்றைய சூழல், மிகவும் வெறுமையாக காணப்பட்டது. மனிதர்களின் நடமாட்டம் குறைந்துவிட்டதால் வியாபாரிகளுக்கான வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் கூடும் இடங்களும் இன்று,  வாடிக்கையாளர்கள் இன்றி வெறுச்சோடி காணப்பட்டது. கொவிட் -19 காரணத்தினால் தமது கடைகளில் வியாபாரமே இல்லை என்று அங்குள்ள வியாபாரிகளில் சிலர் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். 

''இப்பொழு எங்களின் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது சாலையோரத்தில், வியாபாரத்தை நடத்தி வருவோம். கடைக்கு வாடிக்கையாளர்கள் வராததினால் வருமானமும் இல்லை. இத்தருணத்தில் எங்களை மீண்டும் வீட்டிலேயே இருக்கக் கோரினால், எங்களை யார் காப்பாற்றுவது,'' என்று பூக்கடை வியாபாரி கனகராணி தெரிவித்தார்.

''இந்த கட்டுப்பாட்டு உத்தரவினால், அதிகமான வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதில்லை.  இதனால் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது,'' என்று மகாதேவன் தங்கம்மாள் குறிப்பிட்டார்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தின் போது வாடிக்கையாளர்களின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதால், வியாரங்களில் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா