சிறப்புச் செய்தி

கொவிட்-19 : தீபாவளி சந்தைகள் நடத்துவது சாத்தியமாகுமா?

20/10/2020 08:11 PM

கோலாலம்பூர், 20 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி பண்டிகை என்றாலே தேவையான அலங்கரிப்புப் பொருட்கள், புத்தாடைகள், பலகாரங்கள் வாங்குவதற்கு அனைவரின் எண்ணத்திலும் தோன்றுவது தீபாவளி சந்தைகள்தான்.

கொவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில் தீபாவளி சந்தைகள் நடத்துவது சாத்தியமாகுமா? இவ்வாண்டு இறுதி வரை மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

இந்தக் கொவிட்-19 பெருந்தொற்றின் சீற்றம் தற்போது அதிகமாகவே உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நோய் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தீபாவளி சந்தைகள் மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றுவதற்கு கடினமானதாகும்.

இத்தொற்றிலிருந்து நாம் இன்னும் விடுபடாத நிலையில், இவ்வாண்டு தீபாவளி சந்தைகளை தவிர்ப்பதே சிறந்த நடவடிக்கையாகும் என்று பொது மக்கள் சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளனர்.

பேரங்காடிகள் மற்றும் கடைகளில் நாம் கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை வாங்க அனுமதிக்க முடியும். இந்த தீபாவளி சந்தைகள் திறந்த வெளிகளில் இருப்பதால் இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமானதாகும் என்றும் அவர்கள் கூறினர்.

இதில், குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்பும் நமக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டனர். அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றினால், வரும் ஆண்டுகளில் தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடலாம் என்றும் தீபாவளி தொற்று ஒன்று ஏற்படுவதற்கு நாம் காரணமாக வேண்டாம் என்றும் அவர்கள் கூறினர்.

இதனிடையே, இக்காலக்கட்டத்தில் தீபாவளி சந்தை நடத்துவது தேவையற்றது என்று 87 விழுக்காட்டினர் கூறியிருப்பது பெர்னாமா தமிழ்செய்தி இண்ஸ்தாகிராமில் மேற்கொண்ட கருத்து கணிப்பிலும் தெரிய வந்துள்ளது.


--பெர்னாமா