பொது

அரசியல் வெப்பத்தை தணிக்கும் நோக்கிலே முவாஃக்காட் நேஷனல் செயற்குழு கூட்டம் ஒத்தி வைப்பு

20/10/2020 06:34 PM

அலோர் ஸ்டார் , 20 அக்டோபர் (பெர்னாமா) --கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் அனைத்து தரப்பினரின் முழு கவனத்தையும் திருப்புவதை உறுதி செய்வதற்கே, நாட்டின் அரசியல் வெப்பத்தை தணிக்கும் நோக்கத்தில் நேற்று நடைபெறவிருந்த முவாஃக்காட் நேஷனலின் செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆகவே, இந்த தொற்றுநோயைப் தடுப்பதற்காக முயற்சிகளைத் தொடர அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில், எதிர்கட்சியினர் தங்களின் அரசியல் விளையாட்டுகளை ஒத்திவைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹாசான்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

''செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யை பின்பற்றும் வகையில் முவாஃபாக்காட் நேஷனல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாஸ், அம்னோ உச்சமன்றக் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்படும். அரசியல் வெப்பநிலையை நாம் குறைத்து விட்டு கொவிட் தொற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். அரசியல் நிலையானதாக இருக்க வேண்டும், எதிர்க்கட்சி உட்பட, கொவிட் தொற்றை அதன் தன்மைக்கு ஏற்றவாறு கையாளும் முயற்சிகளைத் தொடர அரசாங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,'', என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை கெடா, அலோர் ஸ்டார் அனாக் புக்கிட்டிலுள்ள மத்திய அரசு நிர்வாக வளாகத்தில் துறை தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் துறை அமைச்சருமான தாக்கியுடின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்

மற்றொரு நிலவரத்தில், மக்களவையில் அரசாங்க அலுவல்களை தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு சிம்பாங் ரெங்கம்  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக்  கூறியதன் தொடர்பில் கருத்துரைத்த தாக்கியுடின் அது ஒரு பொதுவான பரிந்துரை என்றும் மக்களவையில் இதற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

 - பெர்னாமா