பொது

பயிர்களை சேதப்படுத்திய யானை பிடிப்பட்டது

18/10/2020 07:49 PM

கிரிக், 18 அக்டோபர் (பெர்னாமா) -- பேரா, கிரிக், கம்போங் பிலாங்கில் அவ்வப்போது நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தும் ஓர் ஆண் யானையை அம்மாநில தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு இலாகா பிடித்திருக்கிறது.

இரண்டு டன் எடையிலான அந்த யானை திரங்கானு தேசிய பூங்காவிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அந்த யானை தங்கள் கிராமத்தினுள் நுழைந்து பயிர்களை நாசம் செய்ததாக அக்கிராம மக்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி யானையைப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, வனவிலங்கு பாதுகாப்பு இலாகா வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.

12 முதல் 14 வயதுக்குட்பட்ட யானையைப் இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் 20 பணியாளர்களும் ரம்பாய் மற்றும் அலாம் என்ற இரு பெண் யானைகளும் உட்படுத்தப்பட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அக்காட்டு யானை பெலும் (Belum) என்ற தனது குழுவில் இருந்து பிரிந்து  கிரிக் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா