Tuesday, 20 Oct 2020
சிறப்புச் செய்தி
17/10/2020 08:09 PM

கோலாலம்பூர், 15 அக்டோபர் (பெர்னாமா) -- பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினுக்கு எதிராக  7 நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாரம் நம்பிக்கை இல்லாத தீர்மானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் செய்யலாம்.

மலேசிய அரசியல் வரலாற்றில் இது போன்ற தர்ம சங்கடமான நிலைமையை எந்தவொரு பிரதமரும் இதற்கு முன் சந்தித்தது இல்லை.

முன்னதாக 113 ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த முகிடின் தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளார் என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் வழி தெரிகிறது.

தன்னை காப்பாற்றிக் கொள்ள அம்னோவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க தயார் என்றும் முகிடின் கூறவும் தொடங்கி விட்டார்.

வரும் 19-ஆம் திகதி, திங்கட்கிழமை அம்னோ, பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அம்னோவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதை பொறுத்தே முகிடின் பிரதமராக நீடிப்பாரா இல்லையா என்பது தெரியும்.

உள்நாக்கில் பகையையும், நுணி நாக்கில் உறவையும் வைத்துக் கொண்டு உலவும் அரசியல்வாதிகள் மத்தியில் நவம்பர் 2-ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 6-ம் திகதி முகிடின் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மிகப் பெரிய சோதனையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் முகிடின் அரசாங்கம், நெருப்பாற்றில் குளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியுற்றால், நாடாளுமன்றத்தை களைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் புதிய  அரசாங்கத்தை அமைத்தாக வேண்டும்.

வரவு செலவுத் திட்ட மசோதா தோல்வியுற்றால் அரசாங்க நிதி திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போகும். அரசாங்க பணியாளர்களுக்கு சம்பளமும் கிடைக்காது.

முகிடின் மற்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் இர்பாஹிமிற்கு இடையில் நடக்கும் அக்கினிப் பரிட்சையில், பிரதமர் பதவியை தட்டிப் பறிக்கும் திட்டத்தில் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆதரவோடு தெங்கு ரசாலி ஹம்சா இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதன் விளைவு, மீண்டும் டாக்டர் மகாதீரின் தலையீடா என்று பலர் முகம் சுளிக்கவும் செய்கின்றனர்

புதிய பிரதமரை நிர்ணயம் செய்வதில் டாக்டர் மகாதீரின் தலையீடு இருக்குமாயின், டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி மற்றும் அவர்களின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை பிரதமராக ஆதரிப்பது உறுதி.


எழுத்து: எம்.விவேகானந்தன்

எழுத்தாளர் சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு நிலையிலான அரசாங்க பணிகளில் பணியாற்றியுள்ளார்.

ஆங்கில ஊடகங்களிலும் இவரது அரசியல் கண்னோட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாகும். பெர்னாமாவின் கருத்தை பிரதிபலிக்கவில்லை

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க