பொது

இந்து சங்கத்தைப் பற்றி இழிவாகப் பேசுவதை நிறுத்துவீர்

10/10/2020 04:43 PM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) --  மலேசிய இந்து சங்கத்தின் நேரடி பார்வையின் கீழ் 3 ஆலயங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. 

அவை, தாப்பாவில் அமைந்துள்ள ஜீவ சமாதியான சத்குரு ஶ்ரீ ஜெகநாதர் சுவாமி ஆத்ம நிலையம், பத்துகேவ்ஸ், சுங்கை துவாவில் அமைந்துள்ள ஆறுமுக விநாயகர் ஆலயம் மற்றும் கோல திரெங்கானுவில் உள்ள ஶ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம் ஆகியவையாகும். 

அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஏறக்குறைய 2,300 ஆலயங்கள் இந்து சங்கத்திடம் பதிவு பெற்றுள்ள நிலையில், ஆலயங்களுக்கு அரணாகவும் தேவையான ஆலோசனைகளை வழங்கும் அங்கீகாரமும் இந்து சங்கம் கொண்டுள்ளது என்பதை சில தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.

நேற்று பத்துமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா கூறிய கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் டத்தோ மோகன் ஷான் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கத்தை ‘செண்டிரியான் பெர்ஹாட்’ அல்லது நிறுவனம் என்று கூறுவதை சில தரப்பினர் நிறுத்தி கொள்ள வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு தைப்பூச விழாவை நடத்த வேண்டாம் மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் கூறவில்லை என்று மோகன் ஷான் தெரிவித்தார். 

மாறாக, மிதமான அளவில் கொண்டாடுவது நல்லது என்று தான் இந்து சங்கம்  ஆலோசனை வழங்கியது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய காலகட்டத்தில் கொவிட் பெருந்தொற்று நாட்டில் மூன்றாவது அலையாக உருவெடுத்து, அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், இது எப்போது முடிவுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. 

இந்நிலையில், தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று மாத காலமே இருக்கும் பட்சத்தில் காவடி செய்தல், தண்ணீர் / அன்னதான பந்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடும் முன்பணம் செலுத்துதல் போன்றவைகளும் விரைவில் தொடங்கும். 

ஆனால், தைப்பூச விழா காலத்தின்போதும், கொவிட் பாதிப்பு இதே அளவில் இருந்து அரசாங்கம் தடை ஏதும் விதித்தால் அதனால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கப் போவது இந்தியர்களே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டே, ஏற்பாடுகளும் விழா கொண்டாட்டமும் மிதமான அளவில் இருப்பது நல்லது என்று மலேசிய இந்து சங்கம் ஆலோசனை வழங்கியதாக மோகன் ஷான் தெரிவித்தார்.

- பெர்னாமா