பொது

எஸ்.ஓ.பி-யை பின்பற்றி தைப்பூசத் திருவிழா நடத்தப்படும்

09/10/2020 10:23 PM

பத்துகேவ்ஸ், 9 அக்டோபர் (பெர்னாமா) -- அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றி நாட்டில் தைப்பூசத் திருவிழா நடத்தப்படும். 

அதேவேளையில், கொவிட்19 பெருந்தொற்று காரணமாக, நாட்டின் நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கும் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் கட்டுப்படும் என்று தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார். 

தைப்பூசத்திற்கு முன்பாக, நவராத்திரி விழா வரவிருப்பதால், எஸ்.ஓ.பி வழிமுறைகளைக் கடைபிடித்து, அதனை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் மூலம் ஆலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டான் ஶ்ரீ நடராஜா கூறியிருக்கின்றார். 

தைப்பூசத்திற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், நவராத்திரி விழா நிறைவடைந்த பிறகு இது குறித்து, அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் முடிவும் எடுக்கப்படும் என்று பத்துமலை தேவஸ்தானத்தில், கல்வி உதவி நிதி வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் போது, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். 

''தைப்பூசம் குறித்து கவலைப்பட வேண்டாம். அரசாங்கம் உத்தரவிட்டால் நாங்கள் எப்படி நடத்த முடியும். ஆகவே நாம் ஏன் இப்பொழுதே அது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி கேட்க வேண்டும். அரசாங்கத்திற்கே தெரியும். இதனை தெரிவிக்க வேண்டுமா? கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தால் நாங்கள் கோயிலை திறக்க முடியுமா? என்றோ நடக்க வேண்டிய தைப்பூசம் குறித்து இப்பொழுது ஏன் செய்தி வெளியிடுகிறீர்கள்,'' என்று அவர் தெரிவித்தார்.

மக்களின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் தேவஸ்தானம் முன்னுரை அளிக்கும் அதேவேளையில், நேர்த்திக் கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டிய உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குமே தவிர அவர்களை தடுத்து நிறுத்த முடியாது என்ற சூழ்நிலையையும் நடராஜா இவ்வாறு விவரித்தார். 

''நாங்கள் விதிமுறைகளை மட்டுமே நிர்ணயிக்க முடியும். ஆனால் தைப்பூசத்தை நிறுத்த முடியாது.வழிப்பாட்டுத் தலங்களை மூடும்படி உத்தரவிடப்படவில்லை. ஆகவே மக்கள் ஆலயத்திற்கு வந்துக் கொண்டு தான் இருப்பார்கள். வரக்கூடிய மக்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கான தேவைகளையும் உதவிகளையும் தேவஸ்தானம் வழங்கும். ஆயினும் அரசாங்கம் தைப்பூசத்திற்கு அனுமதி வழங்காவிட்டால், நாங்களும் அவ்வுத்தரவை பின்பற்றுவோம்,'' என்று அவர் தெளிவுப்படுத்தினார். 

இதனிடையே, தைப்பூச திருவிழா, தவிர்க்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் வைத்துள்ள கோரிக்கையையும் நடராஜா கடுமையாக சாடினார். 

''மலேசிய இந்து சங்கம் வியாபார நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு சங்கம். தைப்பூசத்தை நடத்துபவர்கள் கோவிலைச் சாந்தவர்களாவர். அவர்களே அமைதியாக இருக்கும் பட்சத்தில் கோவிலை வழிநடத்தாத இந்து சங்கம் இதனைத் தெரிவிப்பது நியாயமானது கிடையாது,'' என்று அவர் கூறினார். 

அதோடு, வெகு விரைவில் நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களை, ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக, ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், இந்து ஆலய ஒருங்கிணைப்பு பேரவையைத் தொடங்கப்படவிருப்பதாக நடராஜா தெரிவித்தார். 

நாட்டில் கடந்த சில தினங்களாக புதிய கொவிட்-19 நோய் சம்பவங்களின் எண்ணிக்கை, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், உரிய நேரம் வரும் போது, அரசாங்கத்தின் முடிவை தேவஸ்தானம் ஏற்கும் என்று நடராஜா கூறினார். 

அது குறித்த முடிவுகள் இல்லையென்றால், முருகப்பெருமானின் அருளோடும் ஆசியோடும், எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றி நாட்டில் தைப்பூசத் திருவிழா ஆலயங்களில் நடத்தப்படும் என்று நடராஜா தெரிவித்தார். 

-- பெர்னாமா