உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

03/10/2020 08:42 PM

புது டில்லி, 03 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியா உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் மாவட்டத்தில் 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் வட இந்திய மாநில அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ''கற்பழித்தவர்களை தூக்கிலிடுங்கள்'' மற்றும் ''முதலில் கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டார், பின்னர் அரசியலமைப்பு முறையால்'' என்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ டெல்லி நாடாளுமன்றத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இந்தியா 

இந்தியாவில், கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த புதிய வழிகாட்டி பயன்படுத்தப்படவிருப்பதைத் தொடர்ந்து, அக்டோபர் 15ஆம் தேதி முதல் அந்நாட்டின் திரையறங்குகள் மற்றும் பயிற்சியளிப்பதற்காக நீச்சல் குளங்கள் ஆகியவை திறக்கப்படவிருக்கின்றன. இந்தியாவில், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 73,544ஆக பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த மரண எண்ணிக்கை ஒரு லட்சத்து 875 ஆக அதிகரித்திருக்கிறது. 

அமெரிக்கா 

கொவிட்-19 காரணமாக தேசிய வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தாம் நலமுடன் இருப்பதாக காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனிடையே, இன்னும் சில தினங்களுக்கு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் டொனல்ட் டிரம்பிற்கு கொவிட்-19-திற்கான மிக குறைவான அறிகுறிகளே இருப்பதாகவும், அவர், இன்னும் நல்ல உறுதியுடன், நாள் முழுக்க தமது வேலைகளை செய்து வருவதாகவும் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கைலெக் மிசெனி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். 

அமெரிக்கா 

கலிபோர்னியாவில், இவ்வாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலம் காட்டுத்தீயினால் சேதமடைந்திருப்பதோடு 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த இந்த காட்டுத்தீச் சம்பவம், இப்பருவத்தில் மிக மோசமான ஒன்றாகப் பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. 

--பெர்னாமா