பொது

சிவப்பு மண்டல மாணவர்களின் புதிய தவணைக்கான பதிவை ஒத்தி வைக்க அமைச்சு வலியுறுத்து

27/09/2020 10:09 PM

கோலாலம்பூர், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டிலுள்ள சில மாவட்டங்களில் கொவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிவப்பு மண்டலப் பகுதிகளில் உள்ள மாணவர்களை நேரடி சந்திப்பு வழியாக நடத்தப்படும் புதிய தவணைக்கான பதிவை, உயர் கல்விக்கழகங்கள் ஒத்தி வைக்குமாறு அதன் அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.

வரும் அக்டோபர் மாதம் அட்டவணையிடப்பட்டிருக்கும் புதிய தவணைக்கான பதிவும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையும், சம்பந்தப்பட்ட அம்மாணவர்களுக்கு இணையம் வழியாக நடத்தலாம் என்று, உயர் கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அஹ்மாட் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

நிலைமை வழக்கத்திற்கு திரும்பிய பிறகு நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி.-க்கு ஏற்ப, மாணவர்கள் தங்களின் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லலாம் என்றும் டாக்டர் நோராய்னி கூறினார். 

சிவப்பு மண்டலப் பகுதிகளில் இல்லாத மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்களுக்கானச் சேர்க்கை நிர்ணயிக்கப்பட்டதுபோல் நடைபெறும். 

நிர்ணயிக்கப்பட்ட அனைத்து எஸ்.ஓ.பி.-களையும் பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் கல்விக் கழகங்களையும் தமது அமைச்சு உத்தரவிட்டிருப்பதாக நோராய்னி குறிப்பிட்டார்.   

இது குறித்து மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள, மாணவர்கள் தங்களின் உயர் கல்விக் கழகங்களைத் தொடர்புக் கொள்ளலாம். 

-- பெர்னாமா