பொது

PKPP-யை மீறிய குற்றத்திற்காக 523 பேர் கைது

27/09/2020 08:33 PM

கோலாலம்பூர், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான PKPP-யை மீறிய குற்றத்திற்காக, 523 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 

அதில் இரவு நேர மனமகிழ் மைய நடவடிக்கைகளை முன்னிறுத்தி, கூடுதலாக 356 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

கைது செய்யப்பட்டவர்களில் 483 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள வேளையில், இதர 40 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதைத் தவிர்த்து தொடுகை இடைவெளியைப் பின்பற்றாதது, சுவாசக் கவசம் அணியாதது, சுயப்பதிவு விவரக் குறிப்பு தயார் செய்து வைத்திராதது, சட்டவிரோதக் குடியேறிகள் ஆகிய குற்றங்கள் அடிப்படையிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

மலேசிய ராணுவப் படையின் தலைமையிலான OP BENTENG நடவடிக்கையின் மூலமாக சட்டவிரோதக் குடியேறிகள் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அதேபோன்று கெடா, மெலூர், அமான் ஜெயா ஆகிய மண்டலங்களில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான PKPD, பட்டியலின்படி இன்றோடு நிறைவு பெறுகிறது. 

-- பெர்னாமா