உலகம்

உலக செய்திகளின் தொகுப்பு

27/09/2020 08:19 PM

இந்தியா, 27 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு உதவவிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். எனினும், சனிக்கிழமை ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றும்போது அந்நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 சம்பவங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. 

சிங்கப்பூர் 

இதனிடையே, இதே பொதுப்பேரைவையில் உரையாற்றிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதில் அனைத்துலக சமுதாயம் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார். இந்நோய்க்கு எதிராக போராடுவதில், தற்போது பல்வேறு தரப்பிடமிருந்து தடுப்பூசி அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

லண்டன் / இங்கிலாந்து

சாதனங்களுக்கு இடையில் தொடுகை இடைவெளியை கண்காணிக்கவும் அதைப் பயன்படுத்துபவர்கள் தொடுகை இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும் கொவிட்-19 புதிய பாதுகாப்பு செயலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. லண்டனைத் தளமாகக் கொண்ட புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்று உருவாக்கிய இந்த செயலியை இங்கிலாந்தின் மிகப்பெரிய ரயில் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

மெல்பர்ன், ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மெல்பர்னில், கொவிட்-19 நோயினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில், தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் முதல் அதிகமான சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல விருப்பதோடு, ஒரு லட்சத்து 25,000-திற்கும் மேற்பட்டோர் பணிக்கு திரும்ப விருக்கின்றனர். 

உலக நாடுகள்

உலகம் முழுவதும் இதுவரை மூன்று கோடியே 3,083,646 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நோயினால் இதுவரை, 999,087 பேர் உயிர் இழந்திருப்பதோடு, இரண்டு கோடியே 4,441,958 பேர் குணம் அடைந்திருக்கின்றனர். 

-- பெர்னாமா