பொது

ஆதரவாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட அன்வார் தவறிவிட்டார்

25/09/2020 08:41 PM

தம்புனான், செப்டம்பர் 25 (பெர்னாமா) -- எதிர்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அறிவித்திருக்கும் கூற்று தொடர்பில், பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

எந்தவொரு சத்திய பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பிக்காமல், தம்மை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் தெரிவிக்க தவறி விட்டார் என்றும் முகிடின் சாடியிருக்கிறார். 

''பிரதமர் முகிடின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டதாக அவர் (அன்வார் இப்ராஹிம்) கூறினார். யார் அவருக்கு ஆதரவளிக்கிறார்கள்; யார் அவருக்கு உரிமை அல்லது சத்திய பிரமாணப் பத்திரங்களை வழங்கியது என்று வினவியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. அவர் காத்திருக்குமாறு கூறுகிறார்.'' என்று அவர் தெரிவித்தார்.

சபா தப்புனானில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனலின் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியப்போது அவர் இவ்வாறு கூறினார்.

முகிடினின் தலைமையிலுள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்குப் பதிலாக ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க, மக்களவை உறுப்பினர்களின் வலுவான மற்றும் உறுதியான ஆதரவைப் பெற்றதாக அன்வார் கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். 

அதோடு, ஜி.பி.எஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அரசாங்கத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அன்வாருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டதாகவும் முகிடின் குறிப்பிட்டார். 

அதேவேளையில், அன்வாரை ஆதரிப்பதாகக் கூறப்பட்ட அம்னோவை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை மறுத்திருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

தேசிய சட்டத் துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ருஸ் அருனிடம் இது குறித்து வினவப்பட்டபோது, முகிடினே இன்னும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். 

--பெர்னாமா