பொது

பாடும் நிலா பத்மஶ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்

25/09/2020 08:32 PM

சென்னை, 25 செப்டம்பர் (பெர்னாமா) -- திரை உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இசையால் நம்மைக் ஆட்டுவித்த, முடிசூடா மன்னன், பாடும் நிலா பத்மஶ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். 

ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம், தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், இசைஞானி இளையராஜாவுக்கும், 90-ஆம் ஆண்டுகளில் இசைப்புயல் எ.ஆர் ரஹ்மனுக்கும் ஆஸ்தானப் பாடகராக விளங்கியுள்ளார். 

இசை உலகில் தாம் எட்டாத சிகரமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தனித்துவமிக்க பாடகரும் நல்மனம் படைத்தவருமான எஸ்.பி.பாலாவின் மரணம், தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இசை ரசிகர்களையே மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. 

நிலாவா வே, செல்லாதே வா, மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ, என்ன சத்தம் இந்த நேரம், கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்று இசைஞானியின் இசையில் இந்த சகாப்தம் பாடிய முத்து முத்தான பாடல்களை எத்தனை முறைக் கேட்டாலும் சலிப்பே தட்டாது. 

இசைஞானி மட்டுமின்றி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் இசையுலகில் தலையெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் காதலே என் காதலே, அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, காதல் ரோஜாவே என்று இந்த கின்னஸ் சாதனையாளரின் குரலின் வழி ஒலித்த பாடல்கள் அனைத்தும் என்றென்றைக்கும் தித்திப்பானவை. 

எம்.எஸ்.வி தொடங்கி அனிருத் வரையில் அத்தனை இசையமைப்பாளர்களிடமும் இவர் பணியாற்றியுள்ளார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, மராட்டி, இந்தி என்று அத்தனை மொழிகளிலும் பாடி இசையமைப்பாளர்களின் தனி சாம்ராஜ்யத்தைப் பெற்றுள்ள பெருமை பாடும் நிலாவைச் சேரும். 

பாடகர் மட்டுமின்றி, இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட இவருக்கு ஆறு முறை தேசிய விருதுகள் மட்டுமின்றி இன்னும் ஏராளமான அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. 

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இவர் அனுமதிக்கப்பட்டார். 

அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்து வந்தனர். 

கடந்த சில நாட்களாக எஸ்.பி.பாலாவின் உடல்நிலையில் நல்ல மாற்றம் கண்டிருந்ததாக மருத்துவ நிர்வாகமும் மகன் எஸ்.பி.பி.சரணும் கூறி வந்தனர். 

படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று திடீரென்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில், கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக மருத்துவமனை உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் சமூகவலைத்தளத்தில் தங்களின் வருத்ததை வெளிப்படுத்தி வந்தனர். 

கொவிட் பெருந்தொற்றிலிருந்து உயிர் பிழைத்து நுரையீரல் பாதிப்பால் இறைவனடி சேர்ந்த அன்னாரின் மறைவுக்கு பெர்னாமா தமிழ்ச் செய்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

இவரின் தேகம் மறைந்தாலும் இசையால் இனி தொடர்ந்து மலர்ந்து கொண்டுதான் இருக்கும் 

மண்ணுலகை மகிழ்வித்த பாடும் நிலா பாலாவின் தேனமுத குரல் இனி விண்ணுலகை நிரப்பும்.

இதனிடையே, மீளா துயரத்தில் ஆழ்த்திய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக் குறித்து, உள்நாட்டு கலைஞர்களும் தங்களின் அனுதாபங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். 

--பெர்னாமா