பொது

சபா தேர்தல்: எஸ்.பி.ஆர்.எம் ஊழல் தொடர்பான 10 புகார்களைப் பெற்றது

24/09/2020 09:58 PM

கோத்தா கினாபாலு, 24 செப்டம்பர் (பெர்னாமா) -- சபா  சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரம், இம்மாதம் 12-ஆம் தேதி தொடங்கியது முதல், இதுவரை, ஊழல் தொடர்பாக 10 புகார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் பெற்றிருக்கிறது.

வாக்குகளை வாங்கும் நோக்கத்திற்காக குறிப்பிட்ட ஒரு தொகையைப் பெற்றதாக நம்பப்படும் இருவர் மீது திறக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கையும், அந்த எண்ணிக்கையில் அடங்கும் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

''கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவ்விருவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில் நாங்கள் இதர புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்,''என்று சபா சட்டமன்ற தேர்தல் தொடர்பில், இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

போலீசாருடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, தகவல்கள் பறிமாறிக் கொள்வதுடன் எஸ்.பி.ஆர்.எம்-மைச் சேர்ந்த 106 அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

''கோத்தா கினாபாலு, சண்டக்கான், லஹாட் டத்து, தாவாவ் மற்றும் கெனிங்காவ்  ஆகிய பகுதிகளில் 24 மணிநேர எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை மையங்கள் இருக்கின்றன. அதோடு 0109436002 என்ற எண்களிலும் எங்களைத் தொடர்புக் கொள்ளலாம்,'' என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா