சிறப்புச் செய்தி

இண்ட்ராப் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது

25/09/2020 03:19 PM

கோலாலம்பூர், 24 செப்டம்பர் (பெர்னாமா) -- நவம்பர் 25, 2007-ஆம் ஆண்டு இந்து உரிமைகள் போராட்டக் குழு இண்ட்ராப், மலேசிய இந்தியர்களுக்காக மாபெரும் உரிமை குரல் எழுப்பி உலக கவனத்தை ஈர்த்த நாள். 

2008-ஆம் ஆண்டு நடைப்பெற்ற 12-வது பொதுத் தேர்தலில், சிறுபான்மை இனமாக கருதப்பட்ட இந்தியர்கள் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்ததால், இந்தியர்களின் புதிய உரிமை குரலாக இண்ட்ராப் விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

பல போராட்டங்களுக்கு இடையே 2013-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இண்ட்ராப் , 2018-ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு நல்கி, ஆட்சி மாற்றத்திற்கும் தோள் கொடுத்தது. 

ஆயினும், நம்பிக்கைக் கூட்டணியின் 21 மாதக்கால ஆட்சியின் போது, இண்ட்ராப் அமைப்பு தேசிய பதிவு இலாகாவால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. 

இந்தியர் என்ற உணர்வை மேலோங்கச் செய்து, தங்களுக்கு வழங்கப்பட்டதை மட்டும் பெற்றுக் கொள்ளாமல், தங்களுக்கு வேண்டியத் தேவைகளை அரசாங்கத்திடம் கேட்கும் ஆற்றலையும் தைரியத்தையும் உருவாக்கிய இண்ட்ராப் , கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி ரத்துச் செய்யப்பட்ட அறிக்கை சமூக ஊடங்களில் உலா வருகிறது. 

போராட்டத்தில் உதித்த இண்ட்ராப், ஆலமரமாய் வளர்ந்து இந்தியர்களின் தேவைகளை நம்பிக்கை விழுதுகளாக காக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு, இன்று ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. 

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வாசம் கண்ட இண்ட்ராப் இயக்கத்தின் தோற்றுநர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பி. உதயகுமார் இப்பதிவு ரத்து செய்யப்பட்டது குறித்து வினவப்பட்டபோது கருத்துரைக்க மறுத்து விட்டார். 

நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் இண்ட்ராப் ரத்துச் செய்யப்பட்டது குறித்து அவ்வமைப்பின் தோற்றுனர்களில் மற்றொருவரான முன்னாள் அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி பொன்னுசாமியிடமும் காரணம் கோரப்பட்டது.

''சில அற்பமான காரணங்களுக்காக இந்த அமைப்பு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து எந்த தரப்பினரும் புகார் கூறவில்லை. ஆயினும், அவர்கள் (தேசிய பதிவு இலாகா) குறிப்பிட்ட ஆவணங்களை எங்களிடம் கேட்டிருந்தார்கள். சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாங்கள் வழங்கியப் பின்னர், அதில் ஒரு முக்கியமில்லாத குறிப்பை மேற்கோள் காட்டி இந்த அமைப்பை ரத்து செய்தார்கள். அந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இண்ட்ராப் அமைப்பின் ரத்து நிரந்தரமானதல்ல. அதை மீண்டும் புதிப்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அது குறித்து மக்களிடம் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை என்றும் வேதமூர்த்தி கூறினார். 

''இண்ட்ராப் என்பது இந்தியர்களின் உணர்வு சம்பந்தப்பட்டதாகும். ஆகவே, அதனை ஓர் அரசியல் தொடர்பான கட்சியாக வகைப்படுத்த வேண்டாம்,'' என்று அதன் தொடக்ககால தலைவர்களில் ஒருவரும், அப்போராட்டத்தில் சிறைத் தண்டனை அனுபவித்தவருமான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் வலியுறுத்தினார். 

''ஐ.எஸ்.எ-வில் (உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்) கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் இந்த புதிய இண்ட்ராப் அதாவது 2013-ஆம் ஆண்டில் பதிவுச் செய்யப்பட்ட இண்ட்ராப் அமைப்பில் இந்த ஐவரும் இடம்பெறவில்லை என்பது  உண்மை. ஆகையால் எந்த இண்ட்ராப் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டது என்பது தான் எனது கேள்வி. இண்ட்ராப் அமைப்பை தங்களுக்குரியது என்று யாரும் கோரக்கூடாது. அது ஒட்டுமொத்த இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. அது இந்தியர்களின் உணர்வு. ஆகவே அரசியலில் அதனை ஈடுப்படுத்தக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து,'' என்று கணபதிராவ் தெரிவித்தார்.

இதனிடையே, இவ்வமைப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதன் வழக்கறிஞர் கார்த்திகேசன் ஷண்மூகம் தெரிவித்தார். 

''மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இந்த இயக்கம் தொடர்ந்து செயலாக்கத்தில் இருக்கும். இதற்கு நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அவ்வழக்கில் அனைத்து ஆதாரங்களும் வெளிப்படுத்தப்படும்,'' என்று அவர் குறிப்பிட்டார். 

இந்திய சமூதாயத்தின் உரிமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய, இண்ட்ராப் அமைப்பு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் உரிமைக்கான போராட்டம் இன்று வரையில் ஓயாமல் இருப்பதற்கு அதுவே அச்சாணியாக இருக்கின்றது. 

ஆனால், ஒற்றுமை என்ற ஓர் உணர்வு இல்லாமல், அதன் தலைமைத்துவத்தைப் போலவே அவ்வமைப்பின் நிலைமை இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. 

-- பெர்னாமா