பொது

கொவிட்19: மேலும் 147 சம்பவங்கள்; மூன்று மரணங்கள் பதிவு

23/09/2020 09:34 PM

புத்ராஜெயா, 23 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் இன்று 147 கொவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து 3 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 


இதனுடன், சபா தாவாவ்-வில் உள்நாட்டைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டியை உட்படுத்திய உடின் (UDIN) எனும் புதிய தொற்றையும் சுகாதார அமைச்சு இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. 

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தாவாவ், மெரொதாய் (MEROTAI) சுகாதார கிளினிக்கில் மேற்கொண்ட சுகாதார பரிசோதனையின் போது அம்மூதாட்டிக்கு நோய் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர்களுக்கு இந்நோய் தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. 

உடின் தொற்று தொடர்பாக, சுமார் 128 பேரிடம் கொவிட்-19 சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் மூவருக்கு நோய் தொற்றியிருக்கும் நிலையில், 71 பேருக்கு நோய் தொற்றவில்லை என்றும் 54 பேர் இன்னும் ஆய்வக முடிவிற்காகக் காத்திருப்பதாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்  டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா  குறிப்பிட்டார். 

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி வரை பதிவாகிய 147 சம்பவங்களில் 143 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய நான்கு சம்பவம் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை, மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எண்மரில், இருவருக்கு சுவாச கருவியின் உதவி தேவைப்படுகிறது. 

இந்நோயினால் இன்று மூன்று மரணச் சம்பவங்கள் பதிவாகிய நிலையில் மரண எண்ணிக்கை 133ஆக அதிகரித்துள்ளது. 

-- பெர்னாமா