அரசியல்

தனிமைப்படுத்துதலால் சபாவில் 270 பேர் வாக்களிக்கவில்லை

22/09/2020 02:33 PM

கோத்தா கினபாலு, 22 செப்டம்பர் (பெர்னாமா) --கொவிட்-19 பரவலின் காரணமாக தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால்  அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-மைச் சேர்ந்த 270 அதிகாரிகளும் உறுப்பினர்களும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பொறுப்பை நிறைவேற்றவில்லை.

அவர்கள் அனைவரும், சட்டவிரோதக் குடியேறிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுப் படையின் உறுப்பினர்களாவர் என்று தேசிய போலீஸ் படையின் தலைவர்  டான் ஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்  தெரிவித்தார்.

'' லாஹாட் டத்து மற்றும் கே.கே (கோத்தா கினபாலு) ஆகிய பகுதிகளில் நடவடிக்கை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் கைது செய்த அந்நிய நாட்டு ஆடவரை உட்படுத்தியதாகும். அந்நபர் மீது பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அக்குழுவில் இருந்த அனைவரும்  தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை சபா போலீஸ் தலைமையகத்தில், முன்கூட்டியே வாக்களிப்பு மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம்  அப்துல் ஹமிட் பாடோர்  இதனைத் தெரிவித்தார். 

பொதுமக்கள் குறிப்பாக அம்மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது பாதுகாப்பாக இருப்பதுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறையான எஸ்.ஓ.பி-யையும் பின்பற்ற வேண்டும் என்று அப்துல் ஹமிட் பாடோர்  நினைவுறுத்தினார்.

இன்று முன்கூட்டியே வாக்களிக்கும் 16,887 பேரில்,  7,487 ராணுவப் படையினரும்,  9,390 போலீஸ் படையினரும் அடங்குவர் என்று தேர்தல் பொறுப்பாண்மைக் குழு,  தெரிவித்திருந்தது.

 - பெர்னாமா