சிறப்புச் செய்தி

தந்தை பெரியாரின் 142-ஆவது பிறந்தநாள் இன்று

17/09/2020 09:03 PM

17 செப்டம்பர் (பெர்னாமா) -- ஆழ்ந்த சிந்தனையாலும், தமிழின் அடுக்கு தொழியாலும் 1944-ஆம் ஆண்டிலிருந்து 1949 ஆண்டு வரை தமிழகத்தை திராவிடர் கழகம் வழி புரட்டிப்போட்ட ஈ.வெ.ராமசாமி என்ற தந்தை பெரியாரின் 142-ஆவது பிறந்தநாள் இன்று. 

செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்த அவர், தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ், பகுத்தறிவு சிற்பி என்று அழைக்கப்படும் பெரியார். 

சமூக சீர்திருத்தம், சாதியை அகற்றுவது, மூடநம்பிக்கைகளை களைவது, பெண் விடுதலை என்று தமது வாழ்நாள் முழுவதும் ஓயாத பிரச்சாரத்தை மேற்கொண்டு வாழ்ந்து மறைந்தார். 

ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார். 

அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். 

சமுகத்தில் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’ தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

பெரியார், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது. 

பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். 

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். 

 

--பெர்னாமா