விளையாட்டு

சில விளையாட்டுச் செய்திகளின் தொகுப்பு

17/09/2020 06:54 PM

ரோம், 16 செப்டம்பர் (பெர்னாமா) --கொவிட்-19 நோயின் காரணமாக, கிரான்ட் ஸ்லாம் (GRAND SLAM) போட்டியான அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியில் களமிறங்காத சில முன்னணி ஆட்டக்காரர்கள் தற்போது நடைபெற்று வரும் இத்தாலிய பொது டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்றில், உபசரணை நாட்டின் SALVATORE CARUSO--வை சந்தித்து விளையாடிய, உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் நோவாக் ஜோக்கோவிச், 6-3, 6-2 என்ற நேரடி செட்களில் மிக எளிமையாக வெற்றிப் பெற்றிருக்கிறார்.

கடந்த வாரம் நடந்து முடிந்த அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, ஆட்டத்தின் புள்ளிகளை இழந்த ஜோக்கோவிச், இப்போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறார்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், இப்போட்டியை ஒன்பது முறை வென்றிருக்கும், களிமண் மைதானத்தின் மன்னன் RAFAEL NADAL, 6-1, 6-1 என்ற நேரடி செட்களில் தமது சக நாட்டவரான PABLO CARRENO BUSTA-வை மிகவும் எளிமையாக வீழ்த்தி வெற்றிப் பெற்றிருக்கிறார்.

ஸ்பெய்ன்

இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற பர்சலோனா, GIRONA-விற்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில், பர்சலோனா  3-1 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

அவ்வணியை விட்டு வெளியேறுவதற்கு விண்ணப்பித்து, பின்னர் மறுக்கப்பட்டு, வேறு வழியின்றி மீண்டும் ஆட்டத்திற்குள் களமிறங்கி இருக்கும் பார்சாவின் கோல் மன்னன் லியொனல் மெசி (LIONEL MESSI) அதன் இரண்டு கோல்களைப் போட்டார்.

பிரான்ஸ்

மற்றொரு நிலவரத்தில், பிரான்ஸ் லீகா காற்பந்து போட்டியின் இரண்டு ஆட்டங்களில் விளையாடுவதற்கு பிரபல ஆட்டக்காரர் NEYMAR-ருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

PSG-க்கும் MARSEILLE-க்கும் இடையிலான ஆட்டத்தின் போது, MARSEILLE ஆட்டக்காரர் ALVARO GONZALEZ-க்கு எதிராக, அவர் இனவாதத்தைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், அது தொடர்பில் துல்லியமான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 - பெர்னாமா