பொது

நாட்டில் இன்று மேலும் ஒரு கொவிட்-19 நோய்த் தொற்று பதிவு

17/09/2020 06:23 PM

புத்ராஜெயா, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- சபா, செம்பூர்ணாவில், கர்ப்பிணி பெண்ணை உட்படுத்திய, செலமாட் எனும் புதிய கொவிட்-19 தொற்றை சுகாதார அமைச்சு இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. 

அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உட்பட அத்தொற்றில் இதுவரை இரண்டு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

செலமாட் தொற்று தொடர்பாக, சுமார் 118 பேரிடம் கொவிட்-19 சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதில் 116 பேர் இன்னும் ஆய்வக முடிவிற்காக காத்திருப்பதாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார். 

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி வரை பதிவாகிய 21 சம்பவங்களில் 16 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய ஐந்து சம்பவம் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். 

இதுவரை, மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 13 பேரில், இருவருக்கு சுவாச கருவியின் உதவி தேவைப்படுகிறது. 

இந்நோயினால் இன்று எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகாத நிலையில் மரண எண்ணிக்கை 128-ஆக நீடிக்கிறது.

-- பெர்னாமா