அரசியல்

சபாதேர்தல்: மற்ற மாநிலங்களைப் போலவே சபா மாநில மக்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆதரவு அவசியம் - பிரதமர்

16/09/2020 07:55 PM

கோத்தா கினபாலு, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- மாநிலத் தேர்தலை முன்னிட்டு சபா மாநில மக்களுக்காக பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் ஜி.ஆர்.எஸ். (GRS) எனப்படும் சபா மக்கள் கூட்டணியின் உறுதி மொழியை இன்று வெளியிட்டிருக்கிறார். 

உரிமை, நேர்மையான தலைமைத்துவம், ஒன்றிணைந்த தூர நோக்கு செழிப்பு, மற்றும் சபா மக்களின் ஒருமைப்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டே, அந்த உறுதிமொழி செய்யப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறி இருக்கின்றார். 

வரும் செப்டம்பர் 26-ஆம் தேதியில் நடைபெறவிருக்கும் தேர்தலில், மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் நம்பிக்கையை, பெரிக்காதான் நேஷனல், PN தேசிய முன்னணி, BN மற்றும் சபா பெர்சத்து கட்சி, PBS ஆகியவற்றின் கூட்டணிக்கு வழங்கினால் மட்டுமே, இந்த உறுதிமொழி அமல்படுத்தப்படும் என்றும் டான் ஶ்ரீ முகிடின் தெரிவித்தார். 

சபா மக்களின் நழ்வாழ்விற்கும் மேம்பாட்டிற்கும் வழிவகுப்பது மட்டுமின்றி, கூட்டணி கட்சிகள் இணைந்து சேவையை வழங்குவதற்கு இந்த உறுதிமொழி மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

''மற்ற மாநிலங்களைப் போலவே, சபா மாநில மக்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் பல்வேறு நிலையிலான ஆதரவும் பாதுகாப்பும் அவசியம் தேவை,'' என்று அவர் கூறினார்.

புதன்கிழமை, சபா கோத்தா கினபாலுவில் GRS-சின் உறுதிமொழியை வெளியிட்டபோது, முகிடின் இவ்வாறு கூறினார். 

-- பெர்னாமா