சிறப்புச் செய்தி

சுங்கை சிப்புட் மக்களுக்காக 'உதவி கிளினிக்'

13/09/2020 09:26 PM

சுங்கை சிப்புட், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- மக்களின் சுகாதார நலன் கருதி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் உதவி கிளினிக் ஒன்று இன்னும் இரண்டு வார காலகட்டத்தில் திறக்கப்படவிருப்பதாக ம.இ.கா  தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

சுங்கை சிப்புட் சுற்றுவட்டார பகுதியில், வயதானவர்கள் பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படு வருவதுடன் ரத்த அழுத்தம், இருதய பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருவதாக அவர் கூறினார். 

இதனைக் கருத்தில் கொண்டு இங்குள்ள மக்களுக்கு இந்த உதவி கிளினிக் இன்னும் இரண்டு வார காலகட்டத்தில் அமைக்கப்படும். 

இதில் நோயாளிகள் மருந்துக்கு மட்டும் மிகவும் குறைந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.  மருத்துவர்கள் கட்டணம், சிகிச்சை கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

எனினும் மருந்து கட்டணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று சுங்கை சிப்புட், கம்போங் முகிபாவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறினார். 

கிளினிக்குச் சென்றால் 50 முதல் 60 ரிங்கிட்வரை  செலவாகும் என்று தயக்கம் காட்டி,  மக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்க மறுக்கின்றனர்.

இங்குள்ள பொது மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டியே,  தாங்கள் இந்த உதவி கிளினிக் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

--பெர்னாமா