Wednesday, 23 Sep 2020
சிறப்புச் செய்தி
11/09/2020 07:32 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- மரணிக்காத மகாகவி மரணம் பெற்ற நாள் இன்று..! 

தமது எண்ண உணர்வுகளை தமிழ்க் கவிதைகளாகவும் புரட்சி சிந்தனையாகவும் மக்களின் மனதில் கொழுந்துவிட்டு எரியச் செய்த பாரதி எனும் தமிழகத்து தீ... 

உடலால் அன்று அணைந்து போனாலும் அதன் எழுத்துக்களால் பல தலைமுறைகள் தாண்டியும் இன்னும் வெளிச்சம் கொடுத்து நிற்கிறது. 

அர்த்தம் நிறைந்த சுப்ரமணிய பாரதியின் 99-வது நினைவு தினத்தை மரியாதையுடன் திரும்பி பார்க்கிறது, பெர்னாமா தமிழ்ச்செய்தி..!

1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்ப்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதில், நோய்வாய்ப்பட்டு, 1921 செப்டம்பர் 11-ஆம் நாள் சுப்ரமணிய பாரதி மரணமடைந்தார். 

தமது 39 ஆவது வயதில் பாரதியார் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றாலும், அந்த எழுத்துக்கள் இன்னும் நம்மை சிறைப்பிடித்திருப்பதை மறுப்பதற்கில்லை. 

அரசியல், ஆன்மீகம், காதல், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, பெண் விடுதலை என்று, முண்டாசு கவியின் பேனா, தொடாத எல்லைகள் இல்லை. 

இப்படி ஏகப்பட்டத்தை எழுதியுள்ள பாரதி, தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் தனித்துவத்தையும் பார் போற்றும் வகையில் புகழ்ந்திருப்பார். 

பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் வைத்திருந்த ஆங்கிலேயர்களை, சுதந்திர சிந்தனைகளை, தமது பேனாவின் மூலம் எதிர்த்து துரத்தி அடித்த பாரதி, பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த, பெண் விடுதலை குறித்தும் முழங்கினார். 

இன்றைக்கு நாம் காணும் பெண்களின் சமூக நிலையும் பாரதியார் கால சமூக நிலையும் வெவ்வேறாக இருந்தாலும், காதல், பெண் சிசுக் கொலை, வேலையில்லாத் திண்டாட்டம், மனிதம், வரதட்சணை, நடப்பியல் கூறுகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் அவர் துணிந்து பணி செய்தார். 

மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஏற்புடையதாக மாற்றுவதில், பாரதியின் வார்த்தைக் கூர்மையும் செயல் ஆர்வமும் அஸ்திவாரங்கள் இட்டதை காலம் என்றும் மறக்காது. 

காலத்திற்கு ஏற்ற பாரதியின் சிந்தனைகள், மக்கள் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவரின் நினைவுகள் இன்றும் பள்ளிகளில் தொடர்ந்து போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

 -- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க