விளையாட்டு

அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி: நோவாக் ஜோக்கோவிச் தகுதி நீக்கம்

07/09/2020 05:05 PM

நியூயார்க், 7 செப்டம்பர் (பெர்னாமா) --அமெரிக்கா, நியூயார்க்கில் நடைபெற்றுவரும், அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் நோவாக் ஜோக்கோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரெர்  (ROGER FEDERER), ஸ்பெனின் ராஃபெல் நாடால் (RAFAEL NADAL) போன்ற முன்னணி ஆட்டக்கார்கள், பங்கேற்காத இப்போட்டியில், நோவாக் ஜோக்கோவிச் வெற்றியாளராக வாகை சூடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

திங்கட்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச், ஸ்பெனின் PABLO CARRENO BUSTA-வை சந்தித்து விளையாடினார்.

இவ்வாட்டத்தின் முதல் சுற்றில் PABLO 6-5 என்று முன்னிலை வகித்தப் போது, அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிருப்தியில் இருந்த ஜோகோவிச், மைதானத்தின் நடுவில் இருந்த பந்தை வெளியே தட்டி விட்டார்.

அந்த பந்து தவறுதலாக நடுவரின் தொண்டைப் பகுதியில் விழுந்தது.

இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்ட ஜோக்கோவிச்-சின் அந்நடவடிக்கை, கிரான்ட் ஸ்லாம் (GRAND SLAM) விதிகளுக்கு முரணாக இருப்பதால், அவரை இப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக அமெரிக்கா பொது டென்னிஸ் போட்டி நிர்வாகம் கூறியது.

அதோடு, இப்போட்டியில் எடுத்த புள்ளிகளை இழப்பதுடன், இதில் ஜோகோவிச் வென்ற பரிசுத்தொகை அபராதமாக மீண்டும் வசூலிக்கப்படும்.

இந்நிலையில், தாம் தவறுதலாக பந்தை அடித்ததாகவும், உள்நோக்கம் கொண்டு இந்த செயலை செய்யவில்லை என்றும் ஜோகோவிச் கூறியிருந்தார்.

 - பெர்னாமா