உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

29/08/2020 04:53 PM

வாஷிங்டன், 29 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் மார்டின் லுதர் கிங் "எனக்கொரு கனவு உண்டு" என்று தொடங்கிய, பிரபல உரையை நிகழ்த்தி, 57 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் வகையில் அந்த பேரணி நடத்தப்பட்டது. 

தோக்கியோ / ஜப்பான் 

பதவி விலகலை அறிவித்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, தமது நாடு ஏற்று நடத்தவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். உடல்நலம் குன்றி வருவதைக் காரணம் காட்டி, பதவி விலகும் விருப்பத்தை ஷின்சோ அபே நேற்று அறிவித்தார். 

அமெரிக்கா

‘ப்ளாக் பேந்தர்’ எனும் ஆங்கில திரைப்படத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman) புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. 

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76,665 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்வழி இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 62, 713 பேர் இந்நோயினால் பலியாகியிருக்கின்றனர். 

உலக நாடுகள்

உலகம் முழுவதும் இதுவரை, இரண்டு கோடியே 49 லட்சத்து 12,404 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நோயினால் இதுவரை, எட்டு லட்சத்து 41 ஆயிரத்து 335 பேர் உயிரிழந்திருப்பதோடு, ஒரு கோடியே 73 லட்சத்து 655 பேர் குணம் அடைந்திருக்கின்றனர். 

-- பெர்னாமா