பொது

ஜாலோர் கெமிலாங் ஆடைகள்

13/08/2020 03:58 PM

ஜார்ஜ் டவுன், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு முறையும், நாட்டின் வரலாற்று பூர்வமிக்க தினமான ஆகஸ்ட் 31-ஆம் தேதியை கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கமாகும். 

அவ்வரிசையில், விரைவில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்காக, 31 வயதான தையல்காரர் மஹானி உடித், தமது வாடிக்கையாளர்களுக்கு ஜாலோர் கெமிலாங் வடிவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக வடிவமைத்த ஆடைகளை தைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான, பிகேபி காலக்கட்டத்தில், தமக்கு கிடைத்த ஆடைகளுக்கான முன்பதிவுகள் குறைவாகத்தான் இருந்தாலும், சுதந்திர மாதத்தை முன்னிட்டு, அதன் முன்பதிவுகள் தற்போது அதிகரித்து வருவது மனநிறைவு அளிப்பதாக மஹானி விவரித்தார். 

தமது பட்டியலில் இதுவரை ஏறக்குறைய ஆயிரம் ஜோடி ஆடைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த முன்பதிவுகள் செப்டம்பர் 16 மலேசிய தினத்திற்குள் நிறைவுச் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும், ஆறாவது மாதம் தொடங்கி தமக்கு முன்பதிவுகள் கிடைக்கும். ஆனால், இவ்வாண்டு கொவிட்-19 காரணமாக, எட்டாவது மாதத் தொடக்கத்திலிருந்துதான் தாம் முன்பதிவுகளைப் பெறத் தொடங்கியதாக அவர் கூறினார்.

புதன்கிழமை பினாங்கு புக்கிட் ஜம்புல் கட்டிடத்தில் அமைந்துள்ள தமது பூத்திக் அங்கரிக் ரிம்பா அல்திரேஷனில் சந்தித்தபோதுச் மஹானி பெர்னாமாவிடம் இதனைத் தெரிவித்தார். 

இந்த ஜாலோர் கெமிலாங் ஆடை பாஜூ குரோங், சியோங்சாம் , புடவை, மலர் உடை, மலாய்காரர்களின் உடைகள் போன்ற மலேசியாவில் வாழும் பல்வேறு இனங்களின் பாரம்பரிய உடைகள் கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதாக மூன்று குழந்தைகளின் தனித்து வாழும் தாயான அவர் கூறினார். 

ஜாலோர் கெமிலாங் ஆடைகளுக்கான தேவை உற்சாகமூட்டும் அளவில் இருப்பதால், பி.கே.பி-யை முன்னிட்டு நியாயமான விலையிலும் அது விற்கப்படுவதாக மஹானி குறிப்பிட்டார். 

வடிவமைப்பு மற்றும் வடிவத்தைப் பொருத்து, ஓர் ஆடையின் விலை 40 ரிங்கிட்டில் இருந்து 200 ரிங்கிட் வரை விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா