பொது

பெய்ரூட்டில் மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்

13/08/2020 01:44 PM

கோலாலம்பூர், 13 ஆகஸ்ட் (பெர்னாமா) -- லெபனான், பெய்ரூட்டில் உள்ள அனைத்து மலேசியர்களும், இதுவரையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தகவல்களின் அடிப்படையில், மலேசியர்கள் யாரும் அச்சம்பவத்தில் பாதிப்படைந்ததற்கான எந்தவொரு அறிக்கையும் பெறப்படவில்லை என்று பிரதமர் துறையின் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர், டத்தோ ஶ்ரீ முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப்  தெரிவித்திருக்கிறார். 

பெய்ரூட்டில் நிகழ்ந்த அந்த வெடிப்புச் சம்பவத்தில், மலேசியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி லீ வுவேன் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கையில் முகமட் ரெட்சுவான் இதனைக் கூறினார். 

முன்னதாக, அந்நாட்டிற்கு உதவி வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து கெல்வின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முகமட் ரெட்சுவான், கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிரதமர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் அறிவித்தபடி பத்து லட்சம் ரிங்கிட்டிற்கான மனிதாபிமான உதவிகளை லெபனானுக்கு வழங்க மலேசியா இணக்கம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். 

தேசிய பேரிடன் நிர்வகிப்பு நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி, செலவினத்திற்கான அனுமதி கடிதத்தை வெளியுறவு அமைச்சிடம் வழங்கிவிட்டது. லெபனான் செஞ்சிலுவை சங்க அமைப்பிற்கு நன்கொடை வழங்குவதற்கான அனுமதி ஆகும். லெபனான் செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நன்கொடையை வழங்க பல சாத்தியமான வழிமுறைகளை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வருகிறது. இவ்விவகாரம் உடனடியாக இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணியளவில், லெபனான் தலைநகரை உலுக்கிய இரண்டு பெரிய வெடிப்புச் சம்பவங்கள், பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள ஒரு கிடங்கில் சேமிக்கப்பட்ட ரசாயனப் பொருட்களால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. 

அச்சம்பவத்தில், 160 பேர் பலியாகியிருப்பதோடு, 5,000 பேர் காயமடைந்திருப்பதாகவும், மேலும் 60 பேர் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா