விளையாட்டு

ஐரோப்பிய வெற்றியாளர்  கிண்ணம்: அட்லாண்டா-வுடன் மோதுகிறது பி.எஸ்.ஜி.

12/08/2020 03:38 PM

லிஸ்பன், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஐரோப்பிய வெற்றியாளர்  கிண்ண காற்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்சின் பி.எஸ்.ஜி. நாளை அதிகாலை இத்தாலியின் அட்லாண்டா-வுடன் களம் காண விருக்கிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்திருக்கும் பி.எஸ்.ஜி., ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வெல்வதில் தொடர்ந்து தோல்வி கண்டு வருவதால், இம்முறை அதன் இலக்கில் வெற்றிக்கொள்ளும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு முதல் சுற்றில் தனது சொந்த அரங்கில் பார்சிலோனோவை வீழ்த்தி அதிரடி படைத்த பி.எஸ்.ஜி. அணி, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அதே பார்சிலோனாவால் தோற்கடிக்கப்பட்டு போட்டியை விட்டே வெளியேறியது. 

இந்நிலையில், பி.எஸ்.ஜி. அணி, ஐரோப்பிய வெற்றியாளர்  கிண்ணத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதன் முன்னணி ஆட்டக்காரர்களுடன் அது களமிறங்கவுள்ளது. 

குறிப்பாக, பிரான்ஸ் கிண்ண இறுதி ஆட்டத்தில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறிய பி.எஸ்.ஜி.-யின் நம்பிக்கை நட்சத்திரமான கிலியான் எம்பாப்பே (KYLIAN MBAPPE) இரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மீண்டு வந்திருப்பது, அவ்வணியின் பலத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.  

அதேவேளையில், இத்தாலியின் லீக் ஆட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் அட்லாண்டா-வையும் இங்கு குறைத்து மதிப்பிட முடியாது என்று காற்பந்து விளையாட்டு விமர்சகர்கள் கணித்திருக்கின்றனர். 

-- பெர்னாமா