சிறப்புச் செய்தி

கோவில்களுக்கு வழங்கப்படும் மானியங்களைச் சிறந்த வழியில் செலவு செய்யுங்கள் - வீ. கணபதி ராவ்

11/08/2020 01:38 PM

கோலாலம்பூர், 11 ஆகஸ்ட் (பெர்னாமா) --  கோவில்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் சிறந்த வழியில் செலவு செய்யப்பட வேண்டும். 

மேலும் மானியங்கள் பெறும் ஆலயங்கள், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலக்கட்டத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் அக்கோவில்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்திர மானியங்களைக் கொண்டு சுற்று வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அட்சயப் பாத்திரம் என்ற திட்டம் ஒன்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அட்சயப் பாத்திர திட்டத்தின் வழி வறுமை நிலையில் இருந்த 11,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, தோட்டபுற மானியங்களைக் கொண்டு தோட்டப்புறத்தில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் கணபதி ராவ் தெரிவித்தார். 

திங்கட்கிழமை, சிலாங்கூர் ஷா ஆலாம், மாநில அரசு கட்டிடத்தில் நடைபெற்ற கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கணபதி ராவ் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், 39 கோவில்களுக்கு, சுமார் 345 000 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.