பொது

கொவிட்-19: பெருநாள் காலத்தின்போது சிவகங்கை நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு

10/08/2020 07:29 PM

புத்ராஜெயா, 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சிவகங்கை மற்றும் குராவ் நோய்த் தொற்றுடன் தொடர்புடைய கொவிட்-19 நோய் சம்பவங்கள், அண்மைய சில தினங்களாக அதிகரித்து வருகின்றன. 

பெருநாள் காலத்தின்போது செயல்பாட்டு தர விதிமுறையான, எஸ்.ஓ.பி.-யைப் பின்பற்றாமல் உறவினர் வீட்டிற்கு வருகை மேற்கொண்டதும், இதற்கு காரணம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

''இந்த இரண்டு தொற்றுகளில் பெரும்பாலான சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்களையும், முதியவர்களையும், சிறுவர்களையும் உட்படுத்தி இருக்கிறது. அவர்கள், இரண்டிலிருந்து 70 வயதிற்குட்பட்டவர்கள். உறவினர் வீட்டிற்கு வருகைப் புரியும் நடவடிக்கைக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், எஸ்.ஓ.பி.-க்கு உட்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தனிநபர்களுக்கிடையில் பாதுகாப்பான தொடுகை இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்,'' என்று அவர் கூறினார்.

உடல் நலமில்லாத அல்லது நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள், எந்தவொரு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியிலோ பெருநாள் கொண்டாட்டத்திலோ கலந்து கொள்ளக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார். 

புத்ராஜெயாவில், இன்று, திங்கட்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் நோர் ஹிஷாம் இவ்வாறு தெரிவித்தார். 

இதனிடையே, நாட்டில் இன்று மேலும் 11 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதைத் தொடர்ந்து இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,094ஆக அதிகரித்திருக்கிறது. 

இன்று பதிவுசெய்யப்பட்ட 11 சம்பவங்களில் ஐந்து, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியதாகும்.

எஞ்சிய ஆறு சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும். 

இன்று கொவிட்-19 நோயினால் எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகாததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 125 ஆக நீடிக்கிறது. 

-- பெர்னாமா