பொது

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் தயார்

09/08/2020 07:53 PM

கோலாலம்பூர், 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2021-ஆம் ஆண்டில், மீட்புநிலை பொருளாதாரத்தின் இலக்கை அடைய, பி.கே.எஸ் எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், சிறிய தொழில் துறைகளுக்கும் உதவ, அரசாங்கம் தயாராக உள்ளது. 

உணவு, பானங்கள், கால்நடைகள், தானியங்கி போன்ற தொழில்துறைகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான பங்களிப்பை, இதர நிறுவனங்களுடன் இணைந்து, தமது தரப்பு உறுதி செய்யும் என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். 

மலேசிய வெளிநாட்டு வாணிப மேம்பாட்டு இயக்கம், சீரிம் நிறுவனம், தானியங்கி இயந்திர கழகம், மற்றும் ஐ.ஓ.டிமலேசியா ஆகியவை அதில் அடங்கும். இந்த ஆண்டின் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும் என்று பேங்க் நெகாரா கணித்துள்ளது. 

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டில் மலேசியாவின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டால் அதாவது 6.3 விழுக்காடிலிருந்து 7.5 வரை மேம்பாடு அடைந்தால், வளர்ச்சி அடைந்த முதன்மை நாடுகளில் மலேசியாவும் இடம் பெறும் என்று அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். 

மே மாதத்திற்கு பின்னர் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து 7 லட்சத்து 73 ஆயிரமாக குறைந்துள்ளது. ஜூன் மாதம் அதன் கணக்கீடு சிறந்த எண்ணிக்கையை பதிவு செய்திருப்பதாக என்று அவர் குறிப்பிட்டார். 

--பெர்னாமா